சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான தண்ணீர் பாட்டில்கள், பைகள், பொம்மைகள் முதலானவை நமது ரத்தத்தில் கண்டறியும் அளவுக்கு சேர்வதைக் கண்டுபிடித்துள்ளனர்.
`என்விரான்மெண்ட் இண்டர்நேஷனல்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளின் படி, நாம் வாழும் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் நமது ரத்தத்தில் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது எனக் கூறப்படுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களின் வேதிப்பொருள்களான பாலியெத்லின் டெரிஃப்தலேட், பாலியெத்லிக், பாலிமர்கள் முதலானவை மனித ரத்த மாதிரிகளில் கிடைப்பதாகவும், பாலிப்ரோப்லீன் என்ற வேதிப்பொருளின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியாத அளவுக்குக் குறைவாக சேர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியெத்லின் டெரிஃப்தலேட் என்ற வேதிப்பொருள் சோடா பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றிலும், பாலியெத்லீன் என்பது பால் பாட்டில்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் க்ளீனர்கள் முதலானவற்றின் மூலமாகவும், வெள்ளை பாலிமர்கள் பிளாஸ்டிக் பொருள்கள், சிடி, டிவிடி முதலானவை மூலமாகவும் மனித ரத்தத்தில் சேர்கின்றன.
ஆம்ஸ்டெர்டாம் நகரத்தின் வ்ரிஜே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹீதர் லெஸ்லீ இதுகுறித்து, `நம்முடைய வாழ்வாதாரமான ரத்தத்தில் பிளாஸ்டிக் கலந்துள்ளதை ஆதாரங்களோடு நிரூபித்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
மனித ரத்ததில் மைக்ரோ, நானோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கிடும் முறையை இவரது குழுவினர் உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பொருள்களின் அடிப்படை வேதிப்பொருள்களை சுமார் 22 பேரிடம் சோதனை செய்ததில் இந்த ஆய்வு முடிவு பெற்றுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களுள் நான்கில் மூவரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புதிய ஆய்வில் மக்கள் தாங்கள் வாழும் சூழலில் இருந்து மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்களை உறிஞ்சிக் கொள்வதாகவும், அதன் அளவுகளை ரத்தத்தில் கணக்கிட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் 22 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சராசரியாக ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு சுமார் 1.6 மைக்ரோகிராம் அளவிலான பிளாஸ்டிக் வேதிப்பொருள்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 10 பெரிய குளியல் தொட்டிகளில் ஒரு டீஸ்பூன் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக இதனை ஒப்பிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சோதனை செய்யப்பட்டதில் நான்கில் ஒருவரின் ரத்த மாதிரிகளில் கணக்கிடும் அளவுக்குப் பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வாளரான மார்ஜா லமோரி என்பவர், `இந்த ஆய்வுகள் இந்த வகைகளில் மிகவும் புதியவை. மேலும், இவை போன்ற ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசு மனித உடல்களுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், அது எவ்வளவு பரவியுள்ளது என்பதையும் கண்டறியப் பயன்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் தீங்குகளையும் இதன் மூலம் கண்டறியலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.