சமீபக காலங்களாக ஸ்மார்ட் போன் வந்தவுடன் அனைவருக்கும் செல்ஃபி மோகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக எங்கு போனாலும் அந்த இடத்தின் ஆபத்தை கூட அறியாமல் செல்ஃபி எடுக்கும் மோகம் எங்கும் பரவியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த செல்ஃபி எடுக்கும் செயல் பரவியுள்ளது. அப்படி ஒருவர் செல்ஃபி எடுக்க சென்ற போது பெரிய விபரீதத்தில் சிக்கியுள்ளார். அப்படி அவர் என்ன செய்தார்?
பிலிபைன்ஸ் நாட்டில் அமயா என்ற கேளிக்கை பூங்கா உடன் சேர்ந்த விடுதி ஒன்று உள்ளது. இங்கு வழக்கமாக சுற்றுலா பயணிகள் வந்து தங்குவது வழக்கம். அதேபோல் நெஹிமியஸ் சிப்படா(68) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வந்து இங்கு தங்கியுள்ளார். அப்போது அவர் இந்த கேளிக்கை பூங்காவை முழுவதும் சுற்று பார்க்க திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் தண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பொருள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அது ஒரு முதலை பொம்மை என்று நினைத்துள்ளார்.
உடனே அந்த பொம்மையுடன் சென்று செல்ஃபி எடுத்து கொள்ளலாம் என்று எண்ணியுள்ளதாக தெரிகிறது. இதற்காக வேகமாக அந்த தண்ணீரில் குதித்துள்ளார். அதன்பின்னர் அந்த பொம்மையை அவர் நெருங்கியுள்ளார். அப்போது தான் அவருக்கு அது பொம்மை இல்லை உண்மையான முதலை என்று தெரியவந்துள்ளது. அவர் சுதாரித்து கொண்டு வெளியே வருவதற்குள் அவருடைய இடது கையை முதலை நன்றாக கடித்து தாக்கியுள்ளது. அந்த முதலையிடம் இருந்து சிறிது நேர போராட்டத்திற்கு பின் இவர் வெளியே வந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அவருடைய இடது கை எலும்பு சற்று உடைந்துள்ளது. அத்துடன் அவருடைய இடது கையில் 8 இடங்களில் தையல் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெஹிமியஸ் சிப்படாவின் மகள்,”இந்த தவறுக்கு கேளிக்கை பூங்காவின் அதிகாரிகள் தான் காரணம். ஏனென்றால் அவர்கள் முறையாக இந்த இடத்தில் உண்மையான முதலை உள்ளது ஒரு ஆபத்தான பகுதி என்று பலகையை வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பலகையை வைத்திருந்தால் என்னுடைய தந்தை இந்தப் பகுதிக்கு வந்திருக்க மாட்டார். ஆனால் நிர்வாகம் அப்படி எந்த ஒரு அறிவிப்பு பலகையையும் வைக்கவில்லை” என்று கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பொருளை பார்த்தவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று வந்த நபருக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் கஷ்டப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையிலிருந்து தப்பியுள்ளார். ஆகவே இனிமேலாவாது எந்த விஷயத்தையும் பார்த்தவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தையும் நாம் மாற்ற வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: ஸ்பெயின் நாட்டில் ஒரு அத்திப்பட்டு.. 1992 வெள்ளத்துல இப்படி நடந்துச்சா? வைரல் வீடியோ..