இந்தியா-ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக நல்ல உறவு நீடித்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் சமீப காலங்களாக இந்தியா அதிகளவில் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் மற்றும் உறவு சார்ந்த விஷயங்களை அதிகரித்து வருவது ஒரு சிக்கலாக இருக்கிறது. இது இந்தியா-ரஷ்ய உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்பட்டது. எனினும் வழக்கம் போல் இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்ய இடத்தில் நட்பு ரீதியிலான உறவை பாராட்டி வருகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை, ‘ரஷ்ய அதிபர் புடின் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா வர உள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும் ரஷ்ய அதிபருடன் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்தியா வர உள்ளனர். அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏற்கெனவே அமெரிக்காவுடன் நடைபெற்ற 2+2 சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை போல் ரஷ்யாவுடனும் இந்தியா முதல் முறையாக 2+2 சந்திப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2+2 சந்திப்பில் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளின் உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்களை கையெழுத்து இடுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியா-ரஷ்யா இடையே அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கருதப்படுகிறது. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் ‘குவாட்’ கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில் ரஷ்ய உறவை பலப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று கூறப்படுகிறது. எப்போதும் இந்தியா ரஷ்யாவிடமும் நல்ல உறவை பாராட்டும் என்பதை குறிக்கும் வகையிலும் இந்த சந்திப்பு இருக்கும் என்று பலர் கருதுகின்றனர். தொழில்துறை மற்றும் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்டவற்றிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் அளவில் சில ஒப்பந்தங்கள் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆஃப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல், சிரியா பிரச்னை, ஆசிய-பசிபஃபிக் பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கபடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: வெல்கம் டூ சண்டே சமையல்... நாய் சமைத்து சாப்பிடும் வைரல் வீடியோ !