குழந்தைகளிடம் ஃபோனை கொடுக்காதீர்கள் என வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி எச்சரிப்பது உண்டு. அதையும் மீறி பெற்றோர்கள் சில குழந்தையை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஃபோனை கையில் கொடுத்து ஓரமாக அமர வைத்திருப்பார்கள். அது எவ்வளவு விபரீதமான செயல் என்பது அண்மையில் அமெரிக்காவில் ஒரு குழந்தையின் மூலம் நிரூபனமாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர் பிரமோத் குமார். நியூஜெர்ஸியில் வசித்துவரும் இவருக்கும் இவரது மனைவி மதுவுக்கும் அயான்ஷ் என்கிற 2 வயதுக் குழந்தை உள்ளது. அண்மையில் அயான்ஷிடம் விளையாடுவதற்காக தனது மொபைலை கொடுத்துள்ளார் மது. மகன் வெறுமனே விளையாடிக் கொண்டுதான் இருக்கிறான் என நினைத்தவருக்கு அடுத்த நாளே பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
பிரமோத் வீட்டுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஆன்லைன் பொருட்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. முதலில் ஒன்றிரண்டு பெட்டிகளாக வந்த ஆன்லைன் ஆர்டர்கள் பிறகு மொத்தமாக வீட்டுக்கு வந்துள்ளன. இதனால் முதலில் குழம்பியிருக்கிறார் மது. பிறகு தனது ஆன்லைன் ஆர்டர்களை போனில் சரிபார்த்த மதுவுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அவரது ஃபோனில் இருந்து சுமார் 2000 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சத்துக்கு ஆர்டர்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் மதுவுக்கு அது தனது மகன் பார்த்த வேலை என்பது தெரியவந்துள்ளது.
வால்மார்ட்டில் ஆர்டர் செய்யும் சிறுவன்
வால்மார்ட்டில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வழக்கம் உடையவர் மது. அந்தத் தளத்தில் தான் அவ்வப்போது பார்க்கும் பொருட்களை விஷ்லிஸ்ட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் இவருக்கு உண்டு. தனது பெற்றோர் மொபைல் இயக்குவதை பார்த்த அயான்ஷ், அம்மாவின் மொபைலில் விளையாட்டாக அம்மா சேர்த்து வைத்த அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்துள்ளார். புதுவீட்டுக்காக ஒன்றிரண்டு பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்த மது-பிரமோத் தற்போது அடுத்து செய்வதறியாது திகைத்துள்ளனர். சில பொருட்களை வீட்டுக்குள் எடுத்து வரமுடியாத அளவுக்குப் பெரியதாக உள்ளதால் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இனிமேல் குழந்தை போனில் எதையும் தவறுதலாக செய்யாமல் இருக்க கைரேகை பாஸ்வோர்ட் வைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரமோத் கூறியுள்ளார்.
பெற்றோர்களே அடுத்த முறை உங்களது பிள்ளைகளிடம் மொபைல் போனைக் கொடுப்பதற்கு முன்பு உஷாராக இருங்கள்.