லண்டனில் நடந்த ஏலத்தில், 18-ஆம் நூற்றாண்டில் மைசூரின் ஆட்சியாளரான திப்பு சுல்தான் படுக்கையறையில் வைத்திருந்த வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு ($17.4 மில்லியன்) விற்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 140 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.


படுக்கையறையில் வைத்திருந்த வாள் 


விற்பனையை ஏற்பாடு செய்த ஏல இல்லம் போன்ஹாம்ஸ், செவ்வாயன்று இது அதன் உண்மையான விலை மதிப்பீட்டை விட ஏழு மடங்கு அதிகம் என்று கூறியது. ஆட்சியாளருடனான தனிப்பட்ட சொத்தாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட ஆயுதங்களில் இந்த படுக்கையறை வாள் மிகவும் முக்கியமானது என்று போன்ஹாம்ஸ் மேலும் கூறியது. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த போர்களில் திப்பு சுல்தான் மிகவும் புகழ் பெற்ற மன்னர் ஆனார். அவர் 1775 மற்றும் 1779 க்கு இடையில் பல முறை மராட்டியர்களுக்கு எதிராக போர் செய்தார்.



ஏன் இந்த வாள் தனித்துவமானது? காரணம் என்ன?


"திப்பு சுல்தானுடன் தொடர்புடைய அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டால், இந்த கண்கவர் வாள் மிகப் பெரியது. அதனை அவர் தனது படுக்கை அறையில் பாதுகாப்புக்காக வைத்திருந்ததால், திப்பு சுல்தானுடனான அதன் நெருங்கிய தொடர்புதான் இதனை தனித்துவம் ஆக்குகிறது. அது கைப்பற்றப்பட்ட நாளிலேயே அதன் சிறப்புகள் அனைவருக்கும் தெரியவந்தது. மேலும் அதில் உள்ள சிறந்த கைவினைத்திறன் அந்த வாளை மிகவும் பெருமை மிகுந்ததாக மாற்றுகிறது" என்று போன்ஹாம்ஸ் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை மற்றும் ஏலத்தின் தலைவர் ஆலிவர் வைட் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


போட்டிபோட்டு ஏலம் கேட்ட மூன்று பேர்


திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப் பகுதியில் இந்த வாள் கண்டெடுக்கப்பட்டது. "வாளுக்கு ஒரு அசாதாரண வரலாறு உள்ளது, வியக்கத்தக்க ஆதாரம் மற்றும் ஈடு இணையற்ற கைவினைத்திறன் அதில் அடங்கி உள்ளது. இந்த ஏலம் விடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் நேரில் என இரண்டும் கலந்து நடைபெற்றது. அதில் இரண்டு தொலைபேசி ஏலதாரர்களும், அறையில் இருந்த ஒரு நேரடி ஏலதாரரும் கடுமையாக போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தை கேட்டனர். இதன் விளைவாக அதற்கு பெரும் விலை கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என இஸ்லாமிய குழுவின் தலைவர் நிமா சாகர்ச்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



மைசூர் புலி திப்பு சுல்தான்


அவர் தனது ராஜ்ஜியத்தைக் காத்த திறமைக்காக திப்பு சுல்தானுக்கு "மைசூர் டைகர்" என்று புகழ்ப்பெயர் வழங்கப்பட்டது. அவர் போர்களில் ராக்கெட் பீரங்கிகளைப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு முன்னோடியாக இருந்தார். மேலும் மைசூரை இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க பொருளாதாரம் உயர்ந்த அரசாக மாற்றினார், என்று போன்ஹாம்ஸ் அதன் இணையதளத்தில் கூறப்பட்டது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு, அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு, அவரது துணிச்சலுக்கான பரிசாக வழங்கப்பட்டது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.