உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்கள் தங்களின் செலவுகளை குறைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மந்தநிலையின் விளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.


பொருளாதார மந்தநிலை:


யூரோ தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜெர்மனி பொருளாதார மந்தநிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தை தொட்டு வரும் சூழலில், அமெரிக்கா திவாலாகும் என கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இச்சூழலில், ஜெர்மனி நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு சென்றுள்ளது. (எதிர்மறை வளர்ச்சியே பொருளாதார மந்தநிலை என அழைக்கப்படுகிறது). ஐரோப்பிய கண்டத்தின் சீரற்ற பொருளாதாரம், பல மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பை குறைத்துள்ளது.


2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜெர்மனி, நெகட்டிவ் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் பொருளாதாரம் சுருங்கியது. யூரோவின் மதிப்பு, 0.2 சதவிகிதம் குறைந்து இரண்டு மாதத்திற்கு இல்லாத அளவுக்கு சரிவை கண்டது. அதேபோல, சீனாவின் யுவானும் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது.


சிக்கலில் ஜெர்மனி:


இதுகுறித்து டேனிஷ் வங்கியின் மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் மெலின் கூறுகையில், "இந்த வாரம் அபாயகரமானது. இது பொதுவாக டாலருக்கு பயனளித்துள்ளது. இந்த வாரம் சில மாறுபட்ட குறுக்கு-அட்லாண்டிக் மேக்ரோ தரவுகளைப் பார்த்தோம். ஜெர்மனி மட்டுமே யூரோ அல்ல என்றாலும், பொருளாதாரத்தின் வேகம் மிகவும் பலவீனமாக உள்ளது" என்றார்.


ஒரே வாரத்தில் அமெரிக்காவில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலானது பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. இதனால், உலகையே உலுக்கிய 2008ஆம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்தது. 


சமீபத்தில், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி (SVB) திவாலானது. அந்த வங்கியின் 17 கிளைகளும் மூடப்பட்டுவிட்டன. வங்கியின் அனைத்து சொத்துகளையும் அமெரிக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பு பறிமுதல் செய்தது.


கடந்த 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் திவாலாகும் பெரிய வங்கி சிலிகன் வேலி வங்கி. 2022ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிப்படி அதன் சொத்து மதிப்பு 209 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதன் கணக்கில் 1,743.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்காவின் 16ஆவது பெரிய வங்கி சிலிகன் வேலி வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.