அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தல்:


பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு வென்ற பிறகே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.


அதேபோல, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் அதிபருக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.


அரசியல் ஆலோசகராக எலான் மஸ்க் நியமனமா?


இப்படிப்பட்ட சூழலில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருந்தார். அதுமட்டும் இன்றி, அமெரிக்க அதிபர் தேர்தலில் நம்பிக்கைக்குரிய வேட்பாளராக விவேக் ராமசாமி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.


ஜனநாயக கட்சியை கடுமையாக விமர்சித்தும், குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை புகழ்ந்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.


இந்த நிலையில், அடுத்தாண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அயவா மாகாணத்தில் இதுகுறித்து பேசிய அவர், "ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரசு நிர்வாகத்திற்கு வழிகாட்ட கொண்டு வர விரும்புகிறேன்.


சமீபகாலமாக, எலான் மஸ்க்கை பற்றி நன்கு தெரிந்து கொள்வதில் மகிழ்கிறேன். ட்விட்டரில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ட்விட்டரில் அவர் செய்த செயல், நிர்வாக ரீதியாக அரசில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்றார்.