வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் முறையை சோதனை முயற்சியாக பிரிட்டன் தொழிலாளர்கள் இன்று (ஜூன் 6) முதல் தொடங்கியுள்ளனர்.


பிரிட்டன் முழுவதும் சிப்ஸ் விற்கும் கடை தொடங்கி மிகப்பெரிய நிதி நிறுவனம் வரை மொத்தம் 70 நிறுவனங்களைச் சேர்ந்த 3,300 தொழிலாளர்கள் இந்த சோதனை முயற்சியை தொடங்கியுள்ளனர். உலகிலேயே புதிய தொழில் முறையின் முதல் முயற்சி எனக் கூறப்படுகிறது.


இது 6 மாத காலத்திற்கு பயன்பாட்டில் இருக்கும். வீக் குளோபல், திங்டேங்க் அட்டாநமி நிறுவனங்கள் கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. 4 நாட்களே வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு லாஸ் ஆஃப் பே ஏற்படாது.


ஊழியர்கள் வேலை நேரத்தின் 80% நேரம் பணியாற்றினாலே 100% ஊதியம் வழங்கப்படும். எதற்காக என்றால் அவர்கள் 100% வேலைத்திறனை பயன்படுத்தி முழு பங்களிப்பை அளிப்பதற்காக.


இந்த முயற்சி குறித்து 4 டே வீக் குளோபல் அமைப்பின் சிஇஓ ஜோ ஓ கொனா கூறுகையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னால் உலகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கின்றன. குறைந்த வேலை நேரம் ஆனால் நிறைவான வேலை என்ற அடிப்படையில் முயற்சி செய்ய நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றார்.





ஆய்வாளர்கள், ஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் ஊழியர்களின் செயல்பாட்டையும் கூர்மையாக கவனிக்கும். ஊழியர்களின் நலனையும் ஆராயும். புதிய வேலை முறையில் பாலின சமத்துவம் எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யும்.


அரசாங்கமும் இந்த 4 நாள் வேலை முயற்சியை சோதனை செய்து பார்க்க முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் ஸ்பெயினில் இந்த முறை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சோதனை செய்யப்பட உள்ளது. பாஸ்டன் சமூகவியக் கல்லூரியின் பேராசிரியர் ஜூலியட் ஸ்கோர் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க முயற்சி என்று கூறியுள்ளார். வீக் ஆஃபில் எக்ஸ்ட்ரா கிடைப்பது ஊழியர்களின் ஒட்டுமொத்த மனநிலையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஆராயப் போவதாக சொல்லி இருக்கிறார். வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம், தூக்கம், பயணம் என அனைத்திலும் ஊழியர்களின் திருப்தி ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.


இந்த ஆய்வில் பங்கேற்றுள்ள ஊழியர் ஒருவர், இந்த புதிய வேலை முறையால் தனக்கு உற்சாகம் கூடியிருப்பதாகவும். தனது வேலைத்திறனும் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
வாரத்தில் 5 நாட்கள் வேலை இரண்டு நாட்கள் ஓய்வு என்பது 20ஆம் நூற்றண்டில் வந்த தொழிலாளர் நடைமுறை. 21 ஆம் நூற்றாண்டில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் ஓய்வு என்பதே ஸ்மார்ட் வேலைக்கு சரியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.