தொடர்பே இல்லாமல் சில விஷயங்களை திடீரென வைரலாக்குவதில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள். ப்ரே ஃபார் நேசமணி பற்றிக்கொண்டு வைரலானது நினைவில் இருக்கலாம். அந்த வரிசையில் கடந்த மூன்று வருடங்களாக இன்ஸ்டாகிராமில் ஒரு படம் அதிக லைக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அதுவும் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரே செலிப்ரிட்டி என்கிற நடிகர் கைல் ஜென்னரின் அந்தஸ்தை இந்த முட்டைப்படம் தட்டிப்பறித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இந்த முட்டைப் படத்துக்கு இதுவரை 55.5 மில்லியன் லைக்குகள் அப்படி என்ன ஸ்பெஷல். பார்ப்போம்...
இந்தக் கணக்கின் பெயரே வேர்ல்ட் ரெக்கார்ட் எக் என்பதுதான். இதில் ஒரு முட்டைப்படம் பதிவேற்றப்பட்டிருக்கும்.அதில், கேப்ஷனாக ‘கைல் ஜென்னரின் 18 மில்லியன் லைக்குகளை இந்த முட்டை படத்தை லைக் செய்வதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம் என அவர் குறிப்பிட்டிருப்பார். அந்த முட்டைப்படத்துக்குத் தற்போது வரை கிடைத்திருக்கும் லைக்குகள் 55.5 மில்லியன்கள். இதனை கின்னஸ் சாதனையாக கின்னஸ் ரெக்கார்ட் தளமும் பகிர்ந்துள்ளது.