பொதுவெளிகளில் பாலூட்டும் தாய்மார்களைப் புகைப்படம் எடுப்பது இனி சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனை அரசின் நிதித்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் பொதுவெளியில் பாலூட்டும் தாய்மார்களை அவர்களது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பது இனி சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர்களைப் புகைப்படம் எடுப்பதன் வழியாக அவர்களை அங்கீகரிப்பது ஒருபக்கம் இருந்தாலும் அதன்மூலம் அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை இந்தச் சட்டம் தடுக்கும் என ராப் தெரிவித்துள்ளார். 


இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் அது போலீஸ், குற்றப்பிரிவு, நீதிமன்றம் என அத்தனை துறைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



கடந்த ஏப்ரலில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பொதுவெளியில் பாலூட்டிக் கொண்டிருந்த டிசைனர் ஜூலியா என்பவரை அவரது அனுமதி இல்லாமல் சிலர் புகைப்படம் எடுத்தனர். இதனால் தான் துன்புறுத்தப்பட்டதாக உணர்ந்த ஜூலியா பொதுவெளியில் பாலூட்டுபவர்களை அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றம் என பரப்புரை மேற்கொள்ளத் தொடங்கினார். அதனை அடுத்து அவரது போராட்டத்தில் பலர் இணைந்து கொண்டனர். 










இதுகுறித்துப் பேசும் ஜூலியா, ‘நான் மான்செஸ்டரில் பாலூட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரெனத் தனது டிஜிட்டல் கேமிராவை எடுத்துப் படம் எடுக்கத் தொடங்கினார். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தபோது அவர்கள் அது குற்றமே இல்லை என என்னை ஒதுக்கினார்கள்.அதனால் அதிர்ச்சி அடைந்தேன்.அதை அடுத்துதான் இந்தப் பரப்புரையை மேற்கொள்ளத் தொடங்கினேன் ’ என அவர் கூறினார். 


இந்த சட்டம் இங்கிலாந்தில் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.