தினசரி 10 லட்சம் பேர்:
சீனாவில் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது. சீன அரசாங்கத்தின் தேசிய சுகாதார ஆணையத் தகவலின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா முழுவதும் டிசம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 24.8 கோடி மக்கள் அதாவது கிட்டத்தட்ட 18% மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் பூஜ்ய கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களிடையே தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஷாங்காய் அருகே உள்ள தொழில் நகரமான ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
14 மடங்கு அதிகம்
ஜெஜியாங் நகரத்தில் 6.54 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாகாண மருத்துவமனைகளில் 13,583 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நோயாளி மட்டும் கோவிட் 19 தொற்றால், கடுமையான தொற்றுக்கு ஆளாகி உள்ளார். பிற நோய்களோடு 242 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரத்தில் 4,08,400 பேர் தினந்தோறும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இது வழக்கமாக வருபவர்களைவிட 14 மடங்கு அதிகமாகும். ஜெஜியாங் நகரத்தில் பெரிதாக அறிகுறி இல்லாத வகையில் பொதுமக்கள் அதிக அளவில் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். புத்தாண்டு தினத்துக்குள் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கால கட்டத்தில் தினந்தோறும் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தான வாரம்
பெருந்தொற்றுக் காலத்திலேயே மிகவும் அதிக ஆபத்தான வாரங்களுக்குள் சீனா நுழைவதாக கேபிடல் எகனாமிக்ஸ் என்னும் ஆய்வு இதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் என்ன நிலவரம்?
இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இங்கு கொரோனா தொற்று விகிதம் குறைந்து வந்தாலும், புதிய கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அண்மையில் சீன அரசாங்கம் நாடு முழுவதும் இருக்கும் பிசிஆர் சோதனைச் சாவடிகளை முடியது குறிப்பிடத்தக்கது.