எலான் மஸ்க்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து, அந்த செயலியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்தடுத்து கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் மற்றும் புதிய கட்டண விதிமுறைகள் போன்றவற்றால் பயனாளர்களிடையே பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது.
வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்:
இந்நிலையில் எலான் மஸ்க், "நான் ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என கேட்டு, ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை தொடங்கினார். நீங்கள் விரும்புவதைக் கூறுகையில் கவனமாக இருங்கள், அது கிடைக்கக்கூடும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
பதவியில் இருந்து விலக வலியுறுத்திய பயனாளர்கள்:
அந்த வாக்கெடுப்பில் 1 கோடியே 75 லட்சத்து 2,391 பேர் தங்களது கருத்தை தெரிவித்து இருந்தனர். அதில், 57.5 சதவிகிதம் பேர் ட்விட்டர் நிறுவன தலைமை பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் எனவும், 42.5 சதவிகிதம் பேர் அப்பதவியில் எலான் மஸ்க் தொடர வேண்டும் எனவும் வாக்களித்து இருந்தனர். அதற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், ட்விட்டர் பொறுப்புகளை ஏற்க கூடிய முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகுவேன். புதிய சி.இ.ஓ. வந்ததும் சாப்ட்வேர், சர்வர்ஸ் டீம்களை நான் கவனிப்பேன் எனவும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
சிவா அய்யாதுரை:
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் பணியாற்ற விரும்புவதாக, இ-மெயிலை கண்டுபிடித்த தமிழரான சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், அன்புள்ள எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். எம்.ஐ.டியிலிருந்து 4 பட்டங்களை பெற்றுள்ளேன். 7 வெற்றிகரமான உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளேன். விண்ணப்பிக்கும் செயல்முறையை தயவுசெய்து அறிவுறுத்துங்கள். இப்படிக்கு சிவா அய்யாதுரை என குறிப்பிட்டு, தனது செல்போண் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சிவா அய்யாதுரை?
59 வயதான சிவா அய்யாதுரை மும்பையில் தமிழ் குடும்பத்தில் 02 டிசம்பர் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறினார். தனது 14 ஆவது வயதிலேயே, இண்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம் எனும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார். அதற்கு இ-மெயில் என பெயரிட்டார். 1982 ஆம் ஆண்டு தனது மென்பொருளுக்கான காப்புரிமையை பெற்ற சிவா அய்யாதுரை, இ-மெயில் என்னும் மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என உலகம் முழுவதும் பிரபலமானார்.
சிவா அய்யாதுரை கல்வி:
மாசூசெட்ஸ் இன்ஸ்டட்யூட் ஆஃப் டெக்னாலிஜியில் (எம்.ஐ.டி) பொறியியல் மற்றும் கணிணி அறிவியலில் சிவா இளங்கலை பட்டத்தை பெற்றார். விஷுவல் ஸ்டடிஸ் மற்றும் மீடியா லேபரட்டரி ஆஃப் சயின்டிஃபிக் விஷ்வலைசேஷன் என்கிற படிப்பின் கீழ் முதுகலை பட்டம் பெற்றார். அதே எம்.ஐ.டி யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங்காக மற்றொரு முதுகலை பட்டமும் பெற்றார். சிவா அய்யாதுரை 2007 ஆம் ஆண்டு எம்.ஐ.டியில் கணிணி உயிரியலில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார்.
தொழில்
2008 ஆம் ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க மாணவர்களுக்கான ஃபுல்பிரைட் நிதியுதவியை பெற்றார். அடுத்த ஆண்டு முதல் அவர் பேராசிரியர், கண்டுப்பிடிப்பாளர் மற்றும் கணிணி விஞ்ஞானி ஆகிய மூன்று பணிகளில் இருந்தார். பல்துறை நிபுணரான சிவாவின் கண்டுபிடிப்புகள் எல்லாம் தொழில்நுட்பம், மருத்துவம், ஊடகம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்களை அவர் சொந்தமாக உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார்.