கிறிஸ்துமஸ்:
கிறிஸ்துமஸ் என்றதும் நம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையானவை சாண்டாகிளாஸூம் அவர் தரும் வண்ணமயமான பரிசுகளும் தான். கிறிஸ்துமஸ் தினங்களை வண்ணமயமான விளக்குகள், நட்சத்திரங்கள், பரிசுகளுடன் உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில் உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
செல்லப்பிராணிகள் கொண்டாட்டம்:
ஆனால் ”மனிதர்கள் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமா என்ன? தங்கள் செல்ல நாய்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடி பரிசுகள் பெற்று மகிழலாமே” எனும் க்யூட்டான யோசனையுடன் நாய்கள் பராமரிப்பு நிறுவனம் ஒன்று எடுத்துள்ள முன்னெடுப்பு, இணையவாசிகளின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
அயர்லாந்தைச் சேர்ந்த ’Dogs Trust Ireland’ எனும் நாய்களைப் பராமரித்து வரும் என்ஜிஓ நிறுவனம் ஆண்டுதோறும் தாங்கள் பராமரித்து வரும் நாய்களுக்காக ‘சாண்டா பா டே’ எனும் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம்.
பரிசுகள்:
உலகம் முழுவதுமுள்ள மக்கள் இந்த தொண்டு நிறுவன நாய்களுக்கு சாண்டா பா தினத்தில் பரிசுகள் அனுப்பி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு இந்நிகழ்வு டிச.21ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இதில் கலந்துகொண்டு பராமரிப்பு நாய்கள் பரிசுகளைத் தேர்ந்தெடுத்து மகிழும் க்யூட்டான வீடியோவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது டாக்ஸ் ட்ரஸ்ட் அயர்லாந்து நிறுவனம்.
பரிசுக் குவியலில் இருந்து ஒவ்வொரு நாயும் தங்களுக்கு வேண்டிய பரிசை தேடி எடுத்துச் சென்று விளையாடி மகிழும் இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.