ஆன்லைனில் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மது மற்றும் உணவினை விநியோகம் செய்தது அமெரிக்க உணவு வியோக செயலி.
இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும், சோமோட்டோ மற்றும் ஸ்விக்கியின் முன்னோடி நிறுவனமான அமெரிக்காவின் டோர் டேஷ். இந்த நிறுவனம் அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையளர்களுக்கு, மது மற்றும் உணவினை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் இந்த செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் உணவு விநியோகத்தினை நிறுத்தாமல், தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வந்தது டோர் டேஷ். இதனை அறிந்த அமெரிக்கர்கள் விதவிதமான உணவு மற்றும் மது வகைகளை பணம் செலுத்தாமல் ஆர்டர் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினை சரி செய்துள்ளது நிறுவனம். இது குறித்து அமெரிக்காவின் KTVX என்ற தொலைகாட்சிக்கு, டோர் டேஷ் நிறுவனத்தின் ஊழியர் தெரிவித்திருப்பதாவது, ”எங்களுக்கு முறைகேடான ஆர்டர்கள் பற்றி தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு சரி செய்தோம். இருப்பினும் முறை கேடாக பெறப்பட்ட ஆர்டர்களுக்கு நாங்கள் இழப்பீடுகளை வழங்கி வருகிறோம். இந்த கோளாறுக்குப் பிறகும், நாங்கள் உணவு விநியோக வணிகர்களுடன் அதாவது உணவக உரிமையாளர்களுடன் நல்ல உறவினைத்தான் பேணி வருகிறோம்.
மேலும், நாங்கள் எப்போதும் மிகவும் உயர்ந்த தரமான சேவையினைத் தான் வழங்க நினைக்கிறோம். தற்போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த தொழில் நுட்பக் கோளாறினால் எந்த அளவிற்கு உணவு விநியோக சேவை பாதித்தது என தெரியவில்லை” எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்