வங்கதேசம் கரடோயா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று பயணிகள் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து பேசிய உள்ளூர் காவல்துறை அலுவலர் ஷஃபிகில் இஸ்லாம், "23 உடல்களை மீட்டுள்ளோம். மேலும், உடல்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேடி வருகின்றனர்" என்றார்.
இது தொடர்பாக வடக்கு பஞ்சகரின் மாவட்ட நிர்வாக ஜஹுருல் இஸ்லாம் பேசுகையில், "இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், 70க்கும் மேற்பட்டோர் படகில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்" என்றார்.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் படகின் முழுவதிலும் இருந்தனர். அப்போது, வடக்கு வங்கதேசத்தில் உள்ள போடா நகருக்கு அருகே கரடோயா ஆற்றின் நடுவில் படகு திடீரென கவிழ்ந்து மூழ்கியது.
கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் அமைந்துள்ள வங்கதேசத்தில், ஆறுகளில் செல்லும் படகுகள் விபத்துக்குள்ளாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன.
மே மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மணல் ஏற்றப்பட்ட கப்பல், அதிக பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற விரைவுப் படகில் மோதி பத்மா நதியில் மூழ்கியதில் குறைந்தது 26 பேர் இறந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம், டாக்காவில் ஒரு படகு மற்றொரு கப்பலுடன் மோதி கவிழ்ந்தது. இதில், குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், நேத்ரகோனாவின் மதன் உபாசிலாவில் படகு மூழ்கியதில் 17 பேர் இறந்தனர்.
அதற்கு முன், 2015 பிப்ரவரியில், வங்கதேசத்தில் ஒரு ஆற்றில், சரக்குக் கப்பலுடன், நெரிசல் மிகுந்த கப்பல் மோதியதில், குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர்.