சாண்டா க்ளாஸ் என்றழைக்கப்படும் `கிறிஸ்துமஸ் தாத்தா’ பெரும்பாலும் குழந்தைகளால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விரும்பப்படுகிறார். சிவப்பு உடை, பருமனான உடல்வாகு, தலையில் தொப்பி, முகத்தில் வழியும் புன்னகை என 8 கலைமான்கள் இழுக்கும் வண்டியில் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் இழுத்து வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் நம் நினைவுக்கு வரும். மேலும், சாண்டா க்ளாஸிடம் பரிசு பெறுவதற்காக, ஆண்டு முழுவதும் நல்ல பழக்கங்களையே பின்பற்றும் குழந்தைகள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். 


இப்படி உலகம் முழுவதும் போற்றப்படும் இந்த மர்ம மனிதன் சாண்டா க்ளாஸ் என்பவர் யார்? சாண்டா க்ளாஸ் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம். 


யார் இந்த சாண்டா க்ளாஸ்? 



கதைகளின்படி, தன்னுடைய சித்திர குள்ளர்களின் உதவியுடன் ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்காக பரிசுகள் செய்பவர் சாண்டா க்ளாஸ் எனக் கூறப்படுகிறது. வட துருவத்தில் தன் மனைவியுடன் வாழும் சாண்டா க்ளாஸுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான பரிசுகளை அனுப்புமாறு கடிதங்கள் எழுதுவது உண்டு. 


இந்த வெண்தாடி கொண்ட மகிழ்ச்சியான மனிதனின் கதை கி.பி.280ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் தோன்றியது. அப்போது அங்கு வாழ்ந்த கிறித்துவப் பாதிரியாரான புனித நிகோலஸ் என்ற துறவி அங்கு வாழ்ந்த ஏழைகளுக்கும், உடல் நலிவுற்றோருக்கும் உதவி செய்தபடியே வாழ்ந்தார். சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காகத் தன் முழு சொத்தையும் பயன்படுத்தி உதவி செய்தவர் புனித நிகோலஸ். தன் தந்தையால் விற்கப்பட இருந்த மூன்று சகோதரிகளுக்கு வரதட்சணை செலுத்தி திருமணம் செய்ய உதவியவர் புனித நிகோலஸ். அந்தப் பகுதியில் வாழ்ந்த குழந்தைகளுக்கும், மாலுமிகளுக்கும் பாதுகாவலராகவும் அவர் கருதப்பட்டார். 


மற்றொரு கதையில், நெதர்லாந்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புதிய உலகக் காலனித் தீவுகளை நோக்கிப் பயணித்த போது, அவர்கள் சிண்டெர்க்ளாஸ் என்பவரின் கதையைக் குறித்து பரப்பினர். சிண்டெர்க்ளாஸ் என்ற  டச் மொழி சொல்லுக்குப் புனித நிகோலஸ் என்று பொருள். இந்தப் பாதிரியாரின் கதை 1700ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் பரவ, சிறிது காலத்தில் அவருக்கு ஒரு படமும் உருவாக்கப்பட்டு அதுவே அவரது முகமாக மாறியது. சிண்டெர்க்ளாஸ் என்ற பெயர் காலப்போக்கில் `சாண்டா க்ளாஸ்’ என மாறியது. 



மேலும், சாண்டா க்ளாஸ் எப்போதுமே உடல் பருமனான நபராக மட்டுமே உருவகப்படுத்தப்பட்டது இல்லை. கடந்த 1809ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாஷிங்டன் இர்விங் என்ற எழுத்தாளர், சாண்டா க்ளாஸ் உருவத்தைப் பைப் புகைப்பவராகவும், மெலிதான உடல்வாகு கொண்ட நபராகவும் வடிவமைத்திருந்தார். 


ஒரு சாதாரண துறவி தன் ஈகையால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நினைவுபடுத்தப்படும் சின்னமாக மாறிய கதை இதுதான்!