ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்:

 

இலங்கையில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி அடுத்து அந்நாட்டில் ஆட்சியில் இருந்த ராஜபக்சவினரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

 

 இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு சென்ற நிலையில் ,புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க  தேர்வு செய்யப்பட்டார்.

 

நாட்டு மக்கள் தாமாகவே முன்வந்து  அரசுக்கெதிராக முன்னெடுத்த போராட்டங்களை சில அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மக்களின் போராட்டத்தினால் ஆட்சி மாற்றம்  ஏற்பட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்களுக்கு உரிய மரியாதையையும் ,கௌரவத்தையும் அளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

 

ஆனாலும் போராட்டத்தை ஏற்படுத்தி ஒரு அரசை கவிழ்த்து, மீண்டும் ஒரு புதிய அரசை ஏற்படுத்திய மக்களுக்கு, ஆட்சியாளர்கள் வழங்கும் கௌரவம் இதுதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. மக்களின் அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தை பயன்படுத்தி தான் ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என எதிர்கட்சிகள் தெரிவித்து இருக்கின்றன.

 

மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்:

 

 இந்நிலையில் இலங்கையில் இன்று காலையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட மூர்க்கத்தனமான  தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதேபோல் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பேணப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய, தாமாகவே முன்வந்து விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என மனித உரிமை  ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



 

இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்:

 

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே வன்முறையில் ஈடுபட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதேபோல் இலங்கை ராணுவத்தினரின் இவ்வாறான செயல்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.