தாக்குதலுக்கு கண்டனம்:
கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளிச் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு எதிராக ஒன்று திரள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க எதிர்த்துப் போராடுமாறு வலியுறுத்தியுள்ளார்.மேலும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் 100 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச
இதேவேளை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். அறவழியில் போராடிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது மிகவும் கோழைத்தனமானது என சஜித் பிரேமதாச ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலை ஆணவமிக்க, மிலேச்சத்தனமானது என வன்மையாக கண்டித்து இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். ராணுவத்தினரின் தாக்குதலால் பலர் உயிராபத்துகளுக்கு முகம் கொடுத்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயரை கெடுக்கும் வகையிலேயே இந்த செயல் நடைபெற்று இருப்பதாக சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரி:
இதேவேளை உலக அளவில் ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக இந்த தாக்குதல் சம்பவம் ஊடாக வெளிப்படுத்தி இருப்பதாக 43வது படைப் பிரிவு அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிபர் பதவியைப் பிடித்த ரணில் விக்ரமசிங்க, 24 மணி நேரத்திற்குள் இவ்வாறு மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து தன்னை ஒரு சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளார் என பாட்டாளி சம்பி ரணவக்க விமர்சித்துள்ளார். இலங்கை அரசியலில் கடந்த 45 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க சம்பாதித்திருந்த தாராளவாத ஜனநாயகவாதி என்ற பிம்பத்தை இல்லாமல் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ. நா கண்டணம்:
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையானது ,அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தி இருப்பதாகவே அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபோல் ஐ நா மனித உரிமை அமைப்பு, இலங்கைக்கான அமெரிக்க தூதர் , இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் ,அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என பல்வேறு உலக நிறுவனங்களும், உலக நாடுகளின் தூதர்களும், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கமும் இந்த சம்பவத்துக்கு தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்