கருக்கலைப்புத் தொடர்பான தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ள வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கத் தொடங்கியுள்ளது. 


கருக்கலைப்புச் சட்டம் நீக்கம்:


கருக்கலைக்கும் உரிமையை தேசிய அளவில் சட்டப்புர்வமாக்கிய உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது கடும் கொந்தளிப்பை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கருக்கலைப்புத் தொடர்பான அதிகாரத்தை அந்தந்த மாகாணங்களுக்கே தீர்மானித்துக் கொள்ள அந்த தீர்ப்பு வாய்ப்பளித்தது. இதற்கு முன்பு 22 முதல் 24 வார கருவினை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக் கொள்ளலாம். இதனை தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை அடுத்து அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவித்துள்ளன.




வீடியோக்களை நீக்கும் யூடியூப்:


இதனையடுத்து, மருத்துவ நடைமுறை குறித்த தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கையில் கருக்கலைப்பு குறித்த தவறான கூற்றுகள் அடங்கிய வீடியோக்களை அகற்றத் தொடங்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் பல பகுதிகளில் கருக்கலைப்புக்கான உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பெண்கள் நம்பகமான கர்ப்பம் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் தேடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


“உடல்நலம் தலைப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ கருத்துகளுடன் மக்களை இணைப்பது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நிஜ உலக நிகழ்வுகள் வெளிவரும்போது எங்கள் கொள்கைகள் மற்றும் தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறோம்” என்று யூடியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எலெனா ஹெர்னாண்டெஸ் கூறியுள்ளார்.


சில வாரங்களில் நீக்கம்:


மேலும், இன்று முதல், அடுத்த சில வாரங்களில், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளுக்கான வழிமுறைகளை வழங்கும் வீடியோக்களை அகற்றுவோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல, கருக்கலைப்பை நீங்களே செய்துகொள்ளுங்கள் என்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் குறித்து நச்சுயியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து யூடியூப் நிறுவனம் தனது பாலிசியில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.




டிக்டாக் பாணியில் யூடியூப்:


பிரபல வீடியோ ஆப் நிறுவனமான டிக் டொக் கருக்கலைப்புத் தொடர்பான வீடியோக்களை தங்கள் பக்கங்களில் இருந்து நீக்கத் தொடங்கியிருக்கிறது. தவறான மருத்துவத் தகவல் பாலிசியை மீறுவதாகக் கூறி அந்த வீடியோக்களை நீக்கத் தொடங்கியிருக்கிறது.


பொதுவாக ஒரு பயனரின் பயண விவரங்களை கூகிள் சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால், பயனாளர் எப்போது கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் செல்கிறாரோ அப்போது அந்த இடம் பற்றிய தகவல்களை அழித்துவிடுவோம் என்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் கூகிள் நிறுவனம் கூறியிருந்தது. கருக்கலைப்பு மருத்துவமனைகளைப் பற்றித் தேடும்போது தவறான தகவல்கள் ஏதும் வந்துவிடாதபடி தடுக்குமாறு கூகிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசியலமைப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ஒருவர் யூடியூபைப் பார்த்து கருவை கலைத்த அதிர்ச்சி சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.