பெண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உலகமெங்கும் இன்னும் ஓயவில்லை. பெண் எத்தகைய உயரமான இடத்தில் இருந்தாலும் கூட அவர் ஓர் ஆணின் ஆதிக்கத்துக்கு, ஆண்பார்வையால் ஆக்கிரமிக்கப்பட்ட சமூகத்தின் ஆதிக்கத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
அப்படியொரு சம்பவம், டான்சானியா நாட்டில் அரங்கேறியிருக்கிறது. டான்சானியா நாடாளுமன்ற உறுப்பினர் காண்டெஸ்டர் சிச்வேல். இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வழக்கம்போல் அவைக்கு வந்திருக்கிறார்.




அப்போது அவையில் ஆண் உறுப்பினர் ஹூசேன் அமர், பெண்களின் ஆடை நாகரிகம் பற்றி பேசத் தொடங்கினார். அண்மைக்காலமாக அவையில் பெண்களின் ஆடைப்போக்கு மாறியிருக்கிறது. அவர்கள் ஒழுங்கற்ற முறையில் ஆடைகளணிகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் இதோ அவையில் எனது வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் எனது சகோதரி காண்டஸ்டர் சிச்வேல் என்றார்.
ஒட்டுமொத்த அவையும், காண்டஸ்டரை திரும்பிப் பார்த்தது. அழகாக அடர்மஞ்சள் டாப்ஸ், அதற்கேற்றார் போல் கருப்பு நிற டைட் ஜீன்ஸ் என மிடுக்காக அமர்ந்திருந்தார் காண்டஸ்டர். ஒட்டுமொத்த அவையின் பார்வையையும் உலகப் பெண்களின் பிரதிநிதியைப் போல் பெற்றுக்கொண்டார்.
ஹூசேன் அமரின் அந்தப் பேச்சைத் தொடர்ந்து சபாநாயகர் ஜோப் டுகாய், அவைக்கு ஏற்றமாதிரி ஆடையை மாற்றிவிட்டு பின்னர் வாருங்கள் என்று உத்தரவிட்டார். எவ்வித சலனமும் இல்லாமல் காண்டஸ்டர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.






பின்னர், தொடர்ந்து பேசிய அவரது சகோதரரும் சக உறுப்பினருமான அமர், நாடாளுமன்றம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. நாடாளுமன்ற விதிகளிலும் பெண் உறுப்பினர்கள் டைட் ஜீன்ஸ், ட்ரவுஸர் போன்ற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனாலும், காண்டஸ்டர் இப்படி ஆடை அணிந்திருக்கிறார் என்று வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்தார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் டுகாய், காண்டஸ்டர் மீது வந்துள்ள புகார் முதல் புகார் அல்ல. இதுபோன்று மற்ற பெண் உறுப்பினர்களின் ஆடை தொடர்பாகவும் எனக்குப் புகார் வந்திருக்கின்றன. இனி நாடாளுமன்றக் காவலர்கள் பெண் எம்.பி.க்கள் தகுந்த ஆடையில் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார்.
டான்சானியா எம்பி.க்கு நேர்ந்த இந்த அவலம் தொடர்பான செய்தியும், புகைப்படங்களும் இணையத்தில் தீயாகப் பரவின. இதற்கு உள்நாடு தொடங்கி உலக நாடுகள் அத்தனையும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்றத்துக்கு என்று பிரத்யேகமாக ஆடை இருக்கிறதா? இல்லை டான்சானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கப்போகிறார்களா என ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இன்னொரு இணையவாசியோ, ஹூசேன் அமர், கற்கால மனிதனின் புத்தியில் இருக்கிறார் என்று கடிந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில், டான்சானியா நாடாளுமன்ற பெண் எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக இணைந்து சபாநாயகர் ஜோப் டூகி தனது செய்கைக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று குரல் எழுப்பிவருகின்றனர். நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் இருந்தால் நாட்டில் பெண் உரிமைக்குக் குரல் கொடுக்கலாம் என்று நினைத்தால் இங்கே பெண் எம்.பி.க்களே இன்னும் அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் அவல் நிலையல்லவா நீடிக்கிறது?!