தலைப்பு வேண்டுமானால் முகம் சுளிக்கவைக்கலாம். ஆனால், ஏமன் நாட்டு மீனவர்கள் குழு ஒன்று அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் என்று குதூகலித்துக் கொண்டிருக்கிறது.

சரி, கதைக்கு வருவோம். ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. ஏமன் நாடு ஒருகாலத்தில் எண்ணெய் வளத்தால் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அங்கு எண்ணெய் கிடைப்பதில்லை. நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. மேலும், சியா, சன்னி பிரிவு முஸ்லிம்களிடம் நடக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சியால் அங்கே மக்கள் வறுமை நிலையில் உள்ளனர்.

பொருளாதார சரிவு, போர், போதாதற்கு கொரோனா என்று ஏமன் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. இத்தகைய சூழலில் ஏமன் நாட்டிலிருந்து வந்துள்ளது ஒரு மகிழ்ச்சி செய்தி.

அது ஏமன் மீனவர்கள் குழுவிற்குக் கிடைத்த ரூ.10 கோடி மதிப்பிலான அம்பர். அம்பர்கிரிஸ் (ambergris) என்பது ஸ்பெர்ம் வேல் என்ற அரியவகை திமிங்கலத்தின் உடலில் இருந்து கிடைக்கும் பொருள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் இது திமிங்கலத்தின் வாந்தி. 



 

ஏடன் வளைகுடாவில் உள்ள மீனவ கிராமம் செரயா. இந்த கிராமத்திலிருந்து 35 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது குழுவில் இருந்த மீனவர் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் தான் ஒரு திமிங்கல சடலத்தைப் பார்த்ததாகச் சொன்னார். உடனே, அனைவரும் அங்கு சென்றனர். திமிங்கல சடலம் அங்கே இருந்தது. ஆனால், நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. அப்போதே, அங்கு அம்பர் இருப்பதை மீனவர்கள் உறுதி செய்துவிட்டனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் சடலத்தை கூறுபோட்டனர். திமிங்கலத்தின் வயிற்றில் அம்பர்கிரிஸ் இருந்தது. மொத்தம் 127 கிலோ எடையளவுக்கு அம்பர்கிரிஸ் இருந்தது. அதன்விலை சர்வதேச சந்தையில் 1.5 மில்லியன் டாலர். வறுமையில் வாடிய மீனவர்களுக்கு அது பெரிய அதிர்ஷ்டமாக விடிந்தது.

இதுகுறித்து செராய் மீனவர்கள் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, நாங்கள் ஏழை மீனவர்கள். எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்குமென்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.



கடல் பொக்கிஷம், மிதக்கும் தங்கம் என்றெல்லாம் அம்பர்கிரிஸுக்கு அடைமொழிகள் உண்டு. அம்பர்கிரிஸ் பார்ப்பதற்கு மெழுகுபோல் கெட்டியாக இருக்கும். இது எளிதில் தீக்கிரையாகக் கூடியது. அதனால், இந்தப் பொக்கிஷம் கிடைத்தால் சந்தைக்குக் கொண்டு சேர்க்கும் வரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். ஸ்பெர்ம் திமிங்கலத்தில் ஜீரண மண்டலத்தில் உருவாகும் இந்தப் பொருள் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. வாசனை திரவியங்களில் அம்பர்கிரிஸ் சேர்ப்பதன் மூலம் அதன் வாசனை அதிக நேரம் நீடிக்கும். அதிக நேரம் நீடிக்கும் ரம்மியமான வாசனை உள்ள திரவியத்தில் எல்லாம் அம்பர்கிரிஸ் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சர்வதேச சந்தையில் ஒரு கிலோ அம்பர்கிரிஸின் விலை 50,000 டாலர். இப்போது ஏமன் மீனவர்களுக்குக் கிடைத்துள்ள அம்பரின் விலை இந்திய மதிப்பில் ரூ.10 கோடி. 

இந்த அம்பரை யுஏஇ (ஐக்கிய அரபு எமிரேட்) நாட்டில் உள்ள வியாபாரியிடம் விற்கவுள்ளனர். அதில் கிட்டைக்கும் லாபத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வதோடு, கணிசமான தொகையை தங்களின் மீனவச் சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.