அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி தான் பிரதான கட்சிகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு முடியவுள்ளதால் , அந்த ஆண்டின் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. 


இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த வாரம் அதே கட்சியை சார்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலே போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.


பொதுவாக அதிபர் தேர்தலில் போட்டியில் வேட்பாளராக களமிறங்க விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹேலே களமிறங்க உள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 37 வயதான விவேக் ராமசாமி என்பவரது பூர்விகம் கேரள மாநிலம் வடக்கன்சேரி ஆகும். ஒஹியோவில் பிறந்த விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.