அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணியான மிஷல் ஒபாமா 2018ம் ஆண்டில் அவர் எழுதி வெளியான ‘பிக்கமிங்’ என்னும் நினைவுக்குறிப்புக்காக மிகவும் பாராட்டப்பட்டவர். இதை அடுத்து அவர் தற்போது இரண்டாம் புத்தகமான ‘தி லைட் வி கேரி: ஓவர்கம்மிங் இன் அன்சர்டைன் டைம்ஸ்” என்கிற படைப்பை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். 


இதையடுத்து  வருகின்ற நவம்பர் 15ம் தேதி அன்று இந்த புத்தகம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 14 மொழிகள் மற்றும் 27 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.  கூடுதல் மொழிகள் மற்றும் பிற நாடுகளில் வெளியிடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று வெளியீட்டாளர் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.






புத்தகம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வந்த உடனேயே புத்தகத்தில் என்ன இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மைக்கேல் ஒபாமா இதில் வாசகர்களுக்கு தனது வாழ்வில் இருந்து புதிய கதைகள் மற்றும் அது சார்ந்த மாற்றம், சவால் மற்றும் ஆற்றல் பற்றிய தனது நுண்ணறிவுக்குப் பட்டதைப் பகிர்ந்துள்ளார். "மற்றவர்களுக்காக நாம் ஒளிரும் போது, ​​​​நம்மைச் சுற்றியுள்ள உலகின் செழுமையையும் திறனையும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்” என்ற அவரது நம்பிக்கையும் புத்தகத்தில் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


"சுய மதிப்பு என்பது பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும், இந்த பூமியில் மனிதர்களாக எக்காலத்திலும் எந்த சமயத்திலும் நாம் பகிர்ந்துகொள்வது சிறப்பாக பாடுபடுவதற்கான உத்வேகமே என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம் என்று நான் கற்றுக்கொண்டேன்" என்று அவர் தனது புத்தகத்தின் அறிமுகம் குறித்த பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.