கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.
இந்தியாவுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா:
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கனட விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க தெரிவித்திருந்தது.
நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், மற்றொரு சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக வெளியாகியுள்ள செய்தி உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் புகழ்பெற்ற பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சதி திட்டம் தீட்டியதா இந்தியா?
இந்த சதி திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக சதி திட்டத்தை தீட்டியவர்களே அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையா அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அவர்களின் திட்டத்தை முறியடித்தார்களா என்பது குறித்து தெரியவில்லை என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி சென்றிருந்தார். இதற்கு பிறகுதான், பன்னுன் கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது மட்டும் இன்றி, இந்த கொலை முயற்சி தொடர்பாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
சதி திட்டம் குறித்து அமெரிக்க அரசு முன்பே தகவல் தெரிவித்தா என கேட்கப்பட்ட கேள்விக்கு பன்னுன் பதில் கூற மறுத்துவிட்டார். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் குறித்து அமெரிக்காவே பதில் அளிக்க வேண்டும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். பைனான்சியல் டைம்ஸ் செய்திக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.