கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது, ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது என தமிழ் சினிமா பாடல் வரிகளை கேட்டிருப்போம். அதற்கு எடுத்துக்காட்டாக நமது மாநிலத்தில் உள்ள வேதாரண்யத்திற்கு வரும் பறவைகள் பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். அதுபோல், அலாஸ்காவில்  வாழும் காட்விட் எனும் பறவை இனம் தனது இனப்பெருக்கத்திற்காக நியூசிலாந்திற்குச் சென்று இனப்பெருக்கம் செய்கின்றன.

  


இது குறித்து ஆய்வு நடத்திய யங் நேட்சர் லவ்வர்ஸ் எனும் அமைப்பு சில ஆண்டுகள் செலவழித்து நடத்திய ஆய்வின் முடிவில், மிகவும் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில், அலாஸ்காவில் உள்ள காட்விட் எனும் பறவை இனம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு சற்று நீளமான அலகினை உடைய இந்த பறவையானது, தனது பொன்னிற மேனியில் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதமாக உள்ளது.  இந்த காட்விட் பறவை வாழ்வது ஒரு இடத்திலும், இனப்பெருக்கம் செய்வது மற்றொரு இடத்திலுமாக உள்ளது. இந்த காட்விட் பறவையானது தண்ணீரில் உள்ள மீன்கள், பூச்சிகள், வண்டுகள், லார்வாக்களை பிடித்துச் சாப்பிட்டு உயிர் வாழக் கூடிய பறவைகளில் ஒன்றாகும்.




 


இவ்வாறு அலாஸ்காவில் வாழ்ந்து வரக்கூடிய இந்த காட்விட் பறவைகள், நியூசிலாந்தில் இலையுதிர் காலம் ஏற்படும் போது கடல் வழியாக அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கின்றன. அதாவது அக்டோபர் மாததின் மத்தியில் பயணத்தினை தொடங்கும் இந்த காட்விட் பறவைகள், முதலில் ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் இணைந்து கூட்டம் கூட்டமாக இணைந்து பயணத்தினை தொடங்குகின்றன.


இதில், இளம் பறவைகள் அதாவது இனப்பெருக்கம் செய்ய தகுதியுடைய பறவைகள் கூட்டமாக இணைந்து பயணத்தினை மேற்கொள்கின்றன. அலாஸ்காவின் தென்மேற்கு பகுதியில்  தொடங்கும் இந்த பயணம் நியூசிலாந்தில் முடிவடைகிறது. மொத்தம்  எட்டு நாட்கள் வரை நீடிக்கும் இந்த பயணத்தின் மத்தியில் எந்த விதமான ஓய்வோ அல்லது, இறை எடுத்துக் கொள்வதோ கிடையாது. அதிலும், குறிப்பாக மழை, வெயில் என எதுவுமே இந்த எட்டு நாள் நீண்ட நெடும் பயணத்தினை தடுப்பதில்லை.  மேலும், இந்த பயணத்தில் இவை தண்ணீர் கூட அருந்துவதாக தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அலாஸ்காவின் தென்மேற்கு பகுதியில்  தொடங்கும் இந்த பயணம் நியூசிலாந்தில் முடியும் இந்த பயணத்தின் மொத்த தொலைவு தான் இதற்கு முன்னர் இந்த பறவை பற்றி நாம் தெரிந்து கொண்டதை விடவும் ஆச்சர்யமான விசயம்.


எட்டு நாள் பயணத்தில், இந்த காட்விட் பறவைகள் கடக்கும் தொலைவு  7,000 மைல்கள். நினைத்துப் பார்த்தாலே பெருமூச்சு வந்து விடும் அளவிற்கு நமக்கு இருக்கையில், இயற்கையின் அற்புத படைப்புகளில் ஒன்றாக உள்ள இந்த காட்விட் பறவை ஓய்வின்றி கடந்துவிடுகிறது. நியூசிலாந்திற்கு வந்த பிறகு, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, அதன் பின்னர் அலாஸ்காவிற்கு திரும்புகின்றன.  ஆர்க்டிக் நரி போன்ற விலங்குகளால் இந்த பறவைகள் வேட்டையாடப்படுகின்றன. இந்த பறவையை நியூசிலாந்தில் உள்ள மக்கள் சிலர் வணங்கவும் செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த 7,000 மைல்கள் கொண்ட இடப்பெயர்வு என்பது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இடப்பெயர்வுகளில் மிகப்பெரிய இடப்பெயர்வு எனவும் இந்த அய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.