கி.பி.17 ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் தொற்று நோயான பிளேக் பரவி, தினமும் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். இதனால் வீடுகள் பல காலியானது. அதை பயன்படுத்தி நான்கு திருடர்கள் தினமும் காலியான வீடுகளில் திருடி வந்துள்ளனர். அவர்களை காவலர்கள் ஒருநாள் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ‛ஊரே பிளேக் நோயால் இறந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மட்டும் பயமின்றி திருடிக் கொண்டிருக்கிறீர்கள்,’எப்படி என, அந்த நான்கு பேரிடமும் காவலர்கள் கேட்டுள்ளனர். அப்போது அந்த திருடர்கள் சொன்ன பதிலில் அதிர்ந்து போனார்கள் திருடர்கள்.
‛சார்... எங்கள் பாட்டி முழு பூண்டு ஒன்றை அரைத்து ஒயினில் கரைத்து குடித்துவிட்டால் பிளேக் வராது,’ என்று கூறிதாகவும், அதை பின்பற்றி தினமும் பூண்டு கலந்த ஒயின் குடித்துவிட்டு திருட சென்றதாகவும் அந்த திருடர்கள் கூறியுள்ளனர். திருடர்களின் அந்த தகவலை ஊர் முழுக்க பரப்பி, பிளேக் நோயிலிருந்து மக்களை பாதுகாத்தது பிரான்ஸ் என்கிறது அந்நாட்டு வரலாறு.
கி.மு.., 1300ல் பிரமிடுகளில் பூண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.18 ம் நூற்றாண்டில் லண்டனில் பரவிய விஷக்காய்ச்சலில் தப்பிக்கவும் பூண்டு அந்நாட்டு மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. பூண்டின் மருத்துவம் குணம் அறிந்து தான் ரஷ்யர்கள் அதை பென்சிலின் உடன் ஒப்பிடுகின்றனர். நாம் உண்ணும் உணவிலிருந்து தட்டில் ஒதுக்கி வைக்கும் பூண்டு தான் ஒரு காலத்தில் சர்வரோக நிவாரணியாக இருந்துள்ளது. இனியாவது பூண்டு பயனறிந்து பயன்படுத்துவோம்.