உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதித்த நாடு அமெரிக்கா. உயிரிழப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மக்களை பாதுகாக்க, அந்நாட்டு அரசு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் முதியவர்களாக இருப்பதால் முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதை சற்றும் எதிர்பாராத இளம் வயதினர், தங்களின் டார்ன் வருவதற்குள் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில், முதியவர்கள் போல வேடமிட்டு, தடுப்பூசி போட மோசடி வேலைகளில் இறங்கிவிட்டனர். குறிப்பாக இளம்பெண்கள், முதாட்டிகளை போல வேடமிட்டு தடுப்பூசி போட வருவதும், அவர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்புவதும் தற்போது அமெரிக்காவில் வாடிக்கையாக நடந்து வருகிறது.
சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு வந்த இரு மூதாட்டிகள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களை பரிசோதித்த போது, அவர்கள் இருவரும் 34 வயது கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. மூதாட்டிகளை போல அலங்கரித்து அதற்காக பெரிய தொகையை செலவு செய்து தடுப்பூசி போட அவர்கள் வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இருவரையும் சுகாதாரத்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கொரோனா அச்சத்தில் அமெரிக்காவில் அரங்கேறிவரும் இந்த ஆள் மாறாட்ட மோசடியை எப்படி கட்டுப்படுத்துவது என அமெரிக்க அதிகாரிகள் சிந்தித்து வருகின்றனர்.