இந்த ஆண்டின் மிஸ் நெதர்லாந்து பட்டத்தை திருநங்கை ஒருவர் வென்றுள்ள செய்தி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
மிஸ் நெதர்லாந்து வென்ற முதல் திருநங்கை
ரிக்கி வலேரி கோலே என்ற பெயர் கொண்ட இவர் நெதர்லாந்தில் மாடலிங் துறையில் பிரபலமாக உள்ளார். 22 வயதாகும் இவர் ஒரு நடிகையும் கூட. முதன் முறையாக திருநங்கை ஒருவர் இந்த பட்டதை வென்றுள்ள நிலையில், ரிக்கியின் தைரியம் மற்றும் வைராக்கியத்தை பலர் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் பலரின் அன்பையும் வாழ்த்துக்களையும் அவர் பெற்றிருக்கிறார்.
சமூக வலைதள பதிவு
ரிக்கி இந்த பட்டத்தை வென்ற உடனேயே, அவர் வெற்றி பெற்ற தருணத்திலிருந்து பல படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதோடு அதில் அவர் ஒரு நீண்ட பதிவை எழுதினார். அந்த பதிவின் முதல் வாக்கியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது, "I DID IT", என்று பெருமை கொண்டு எழுதி இருந்தார்.
மிகவும் பெருமையாக உணர்கிறேன்
அந்த நீண்ட பதிவின் ஒரு பகுதியாக, "நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இதன் மூலம் எனது சமூகத்தை பெருமைப்படுத்தவும், அதை வெளியில் கொண்டு வரவும் முடியும், " என்று எழுதினார். மேலும், "ஆம், நான் திருநங்கை தான், எனது கதையைப் பகிர விரும்புகிறேன், ஆனால் நான் ரிக்கியும் கூட தான், அதுதான் எனக்கு முக்கியமானது. இதை நான் என் சொந்த முயற்சியில் செய்தேன், அதன் ஒவ்வொரு தருணத்தையும் விரும்பி செய்தேன்." என்று எழுதினார்.
கடினமான பயணம்
முன்னதாக பல நேர்காணல்களில் ரிக்கி இந்த போட்டியில் தனது பயணம் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாக பல செய்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவருடைய குடும்பத்தின் அபரிமிதமான அன்பும் ஆதரவும்தான் அவரை அனைத்தையும் கடந்து இந்த இடத்திற்கு வர வைத்தது என்றார். இந்த போட்டியில் பங்கேற்ற இரண்டாவது திருநங்கை ரிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில், ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா போன்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை மாடல் ஆவார், ஆனால் அவர் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும், முதன் முறை அதில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனது சக்திவாய்ந்த நிலைப்பாட்டை பதிந்து, வரலாற்றைப் படைத்திருந்தார்.