அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு ஆதரவளிப்பேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தல்


அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன், எதிர்வரும் தேர்தலும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் சார்பின் ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளனர். 


போலவே, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிர்ம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோரும் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். சொந்த கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். 


விவேக் ராமசாமிக்கு பெருகும் ஆதரவு


அடுத்தாண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சார களம் பரபரப்புடன் இயங்கி வருகிறது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமகா கொண்ட தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதேசமயம் இவருடைய கருத்துகள் விமசர்னங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டால் அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. 


டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு


 விவேக் ராமசாமிக்கு அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால்,  டிரம்புடன் சேர்ந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.


விவேக் ராமசாமி அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், நிச்சயம் அவருக்கு ஆதரவு அளிப்பேன்; நான் தேர்வு செய்யப்பட்டால், அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவேன். மிக முக்கியமாக, நான் அதிபரானால் நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வதே முக்கிய பணி. அமெரிக்காவின் வளர்ச்சியை முன்னகர்த்தும் திட்டத்துடன் இருக்கும் மிக சரியான நபருக்குதான் நான் வாக்களிப்பேன். அமெரிக்க மக்களின் நலனை உறுதியளிப்பவருக்கே என் ஆதரவு. அமெரிக்காவை ஒன்றிணைப்பதே என் முதன்மையான நோக்கம்.” என்று குறிப்பிட்டுள்ளார். 


டொனால்டு டிரம்ப் கொள்கைகள் குறித்து விவேக் ராமசாமி பேசுகையில்,”  டிரம்புக்கும் எனக்கும் இடையே ஒரு சில விவகாரங்களில் வேறுபாடுகள் இருக்கிறது. ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை போன்ற  கொள்கை ரீதியாக இருவருக்கும் இடையே 90 சதவீதம் நல்ல உடன்பாடு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். அதோடு,  டிரம்ப் முன்னெடுத்த வெளியுறவு கொள்கை, வர்த்தகம் தொடர்பான திட்டங்களை அடுத்தகட்ட வளர்ச்சி பாதை கொண்டு செல்ல முடியும் என்று விவேக் ராமசாமி தெரிவித்திருப்பதகு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.