உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஜி20 மாநாடு:


உலகப் பொருளாதாரத்தில் 85 சதவிகிதம் அளவிற்கு பங்கீட்டை கொண்டுள்ள, 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்கள் நடைபெற்றன. அதில், ஜி20 நாடுகளை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதைதொடர்ந்து, ஜி20 உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


உலக தலைவர்கள் வருகை:


டெல்லியில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், துருக்கி, தென்னாப்ரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா மற்றும் இத்தாலி என மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி டெல்லியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வரவேற்பு பணிகள் தீவிரம்:


உலக தலைவர்களை வரவேற்கும் விதமாக டெல்லியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் மலர் செடிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. உலக தலைவர்கள் மற்றும் ஜி20 மாநாட்டை குறிக்கும் வகையிலான கட் - அவுட்ர்கள் சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சாலையோர சுவர்கள் வண்ணம் தீட்டப்பட்டு ஜி20 லோகோ, நாட்டின் முக்கிய அடையாளங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களின் வெளிப்புற அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 


பாதுகாப்பு பணிகள்: 


இதனிடையே, உலகின் முக்கியமான சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 



  • டெல்லியை சேர்ந்த 80 ஆயிரம் காவலர்கள் உட்பட மொத்தம் 1.30 லட்சம் பேர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

  • இந்திய காவல்துறையின் அடையாளமான காக்கி நிறை உடையில் இன்றி 45 ஆயிரம் பேர் நீல நிற உடையில் பணிபுரிய உள்ளனர். இவர்களில் திறமைவாய்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உலக தலைவர்களின் நேரடி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்

  • இந்திய விமானப்படை டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருங்கிணைந்த வான்வெளி பாதுகாப்புக்காக விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

  • இந்திய ராணுவம், டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளுடன் இணைந்து வான்வழி அச்சுறுத்தல்களைத் தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிலைநிறுத்தும்

  • சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்

  • மாநாட்டை ஒட்டி டெல்லியின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, நகரத்திற்கான அணுகல் விதிகளுக்கு உட்படுத்தப்படும்

  • உலக தலைவர்கள் பயணிக்க 18 கோடி ரூபார் செலவில் இந்திய அரசு 20 புல்லட் ஃப்ரூப் கார்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது

  • மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது

  • உலக தலைவர்கள் தங்க உள்ள ஐடிசி மவுரியா உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

  •  Staqu எனப்படும் AI ஆராய்ச்சி நிறுவனம் மூலம்,  படங்கள் மற்றும் ஆடியோ போன்ற கட்டமைக்கப்படாத தரவுகளிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. டெல்லியின் எல்லைகளைக் கண்காணிக்கும் அனைத்து CCTVகளிலும் தேவையான மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது

  • மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 300-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

  • டெல்லியின் வான்பரப்பில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது