சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், உலகை ஆளும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் தர்மன் சண்முகரத்தினம் இணைந்துள்ளார். நேற்று முன்தினம் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் 70.4 சதவிகித வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார் தர்மன் சண்முகரத்தினம்.


உலகம் முழுவதும் அதிகாரத்தை அலங்கரிக்கும் இந்திய வம்சாவளியினரை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.


அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்:


அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றி அவரின் தனிப்பட்ட வெற்றி மட்டும் அல்ல. இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அங்கு உயர்ந்து வருவது இதன் மூலம் தெரிய வருகிறது. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமை அவரையே சாரும்.


கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஐந்து இந்திய வம்சாவளியினர் வெற்றிபெற்றனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பெரா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டனர். குடியரசுக் கட்சியின் தேசியக் குழு தலைவருக்கான தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹர்மீத் தில்லான் சமீபத்தில் போட்டியிட்டார்.


அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.


கனடா:


கனடாவில் மத்திய அமைச்சராக பதவியேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அனிதா ஆனந்தை சேரும். அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 26ஆம் தேதி, நிதி வாரியத்தின் தலைவராக அனிதா பொறுப்பேற்றார். அனிதாவின் பெற்றோர் இந்தியர்கள் ஆவர். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.


அனிதாவை தவிர, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் மேலும் இரண்டு இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஜித் சஜ்ஜன் மற்றும் கமல் கேரா ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.


ஐரோப்பிய நாடுகள்:


கடந்த ஆண்டு பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார். பிரிட்டன் நாட்டின் 210 ஆண்டுகால வரலாற்றில்  இளம் வயதில் பிரிட்டன் பிரதமரானவர் இவர்தான். பிரிட்டனின் முதல் இந்துப் பிரதமர் என்ற பெருமையும் இவரையே யாரும். கோவாவை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன், பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


ரிஷி சுனக் அமைச்சரவையில் பிரேவர்மேனுக்குப் பிறகு கோவாவை பூர்வீகமாக கொண்ட இரண்டாவது அமைச்சர் கிளாரி கவுடின்ஹோ ஆவார். தற்போது அவர், எரிசக்தி பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிதி படேல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அலோக் சர்மா சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.


அயர்லாந்தின் பிரதமர் (தாவோசீச்) லியோ எரிக் வரத்கரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அசோக், மரியம் வரத்கர் தம்பதியின் மூன்றாவது குழந்தைதான் லியோ எரிக் வரத்கர். மருத்துவரான இவரது தந்தை, மும்பையில் பிறந்து, 1960களில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போர்ச்சுகல் பிரதமராக பதவி வகித்து வரும் அன்டோனியோ கோஸ்டாவும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.


மற்ற உலக நாடுகள்:


நியூசிலாந்தில் அமைச்சராகப் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளி பிரியங்கா ராதாகிருஷ்ணன். மலையாளி பெற்றோருக்கு சென்னையில் பிறந்த இவர், தற்போது தன்னார்வத் துறை அமைச்சராக உள்ளார்.


டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டின் கார்லா கங்காலூ, இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரும் எழுத்தாளருமான பிரீதம் சிங், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவானந்த் தவே சர்மா, ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கயானா நாட்டின் ஜனாதிபதியான முகமது இர்பான் அலி, இந்திய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மொரீஷியஸின் அதிபராக உள்ள பிரித்விராஜ்சிங் ரூபன், இந்தியாவில் பிறந்தவர். பிரவிந்த் ஜுக்நாத், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொரீஷியஸின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். சந்திரிகாபெர்சாத் "சான்" சந்தோகி, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுரினாம் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். லேவல் ராம்கலவன், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செஷல்ஸ் நாட்டின் அதிபராக உள்ளார். இவருடைய தாத்தா பீகாரைச் சேர்ந்தவர்.