சில நாட்களுக்கு முன் வட ஆப்பிரிக்கா நாடானா மொரோக்கோவில் அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோ மீட்டர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளின் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை 23.11 (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.40 மணி) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 6 முறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 நிமிடங்கள் தீவிரத்தன்மையுடன் இருந்த நிலநடுக்கம் அதற்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. 






இந்த நிலநடுக்கத்தால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்ட வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது.  இதனால் ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.  இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800 கடந்து பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளனர்.






இந்த கோர சம்பவத்திற்கு பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது எக்ஸ் பக்கத்தில், “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளால் மிகவும் வருந்துகிறேன். தேவையான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு தயார் நிலையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய துக்க தினம்: 


இந்த கொடூர நிலநடுக்கத்தால் நாளுக்கு நாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.