வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு தான் லிபியா. நிலப்பரப்பில் பெரிய நாடாக இருந்தாலும் மக்கள் தொகை குறைவுதான். இந்நிலையில் லிபியாவில் டேனியல் என்ற புயல் தாக்கியது. கிழக்கு லிபியாவில் இந்த புயல் தாக்கியதால் அங்கு இருக்கும் டெர்னா நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.






கிழக்கு லிபியாவில் கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து டெர்னா நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் குறைந்தது 5,000 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கிழக்கு லிபியாவின் தேசிய இராணுவத்தின் (எல்என்ஏ) செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மிஸ்மாரி, டெர்னாவுக்கு மேலே உள்ள அணைகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமார் 6000 பேர் இந்த புயலில் பாதிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.  






டேனியல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் உதவியை லிபியா கோரியுள்ளது. இதனடிப்படையில் துருக்கி நாடு மீட்பு பணிகளுக்காக ராணுவ வீரர்களையும் நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்தது.  






 லிபியாவில் உள்ள நான்கு முக்கிய எண்ணெய் சுரங்கங்களான ராஸ் லானூஃப், ஜூயிடினா, பிரேகா மற்றும் எஸ் சித்ரா ஆகியவை கனமழையால் சனிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. பாதிப்புகள் மோசமாக இருக்கும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.