வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆயுத உற்பத்தித் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் ரஷ்யாவிற்கு சென்று இருப்பது, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.


ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர்:


வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு வந்துள்ளார் என்று ஜப்பானிய ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டன. பியோங்யாங்கில் இருந்து தனது தனிப்பட்ட ரயில் மூலம் புறப்பட்ட அவர், ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள முக்கிய ரயில் நுழைவாயிலான காசன் நிலையத்தை அடைந்துள்ளார்.  இந்த பயணத்தில் ஆயுத தொழில் துறை, ராணுவத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் வடகொரிய வெளியுறவு அமைச்சர் ஆகியோர் உடன் உள்ளனர். ரஷ்ய அதிபர் புதினுடன் ஆயுத ஒப்பந்தத்தில் ஈடுபடக்கூடாது என அமெரிக்கா கடும் எச்சரித்த நிலையில், அதையும் மீறி கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளார்.


பேச்சுவார்த்தை:


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த பயணம் முழுமையான அரசு பயணமாக இருக்கும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் உன் தங்கியுள்ள கசான் பகுதியில் இன்று நடைபெறும் கிழக்கு பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் வருகை  தர உள்ளார். இதில் கிம் ஜாங் உன் பங்கேற்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.  தொடர்ந்து, இருதரப்பு உயரதிகாரிகளுக்கும் இடையே உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இருநாட்டு அதிபர்களும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு விலாடிவோஸ்டாக் பகுதியில் நடைபெறு என கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டும் இதே பகுதியில் தான் கிம் ஜாங் உன் மற்றும் புதினின் சந்திப்பு நடைபெற்றது.  


ஆயுத ஒப்பந்தம்..!


ரஷ்யா மீதான உக்ரைன் போர் 18 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.  வட கொரியாவிடம் ரஷ்ய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளன. எனவே, அந்நாட்டிடம் இருந்து ஆயுதங்களை பெற புதின் ஆர்வமாக காட்டி வருகிறார். இந்த நிலையில் தான் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ரஷ்யா சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி உதவி வருவது குறிப்பிடத்தக்கது.


வடகொரியாவின் திட்டம் என்ன?


ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு கைமாறாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற வட கொரிய அதிபர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் கிம் ஜாங் உன் திட்டமிட்டு வருகிறார். இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன. இதன் காரணமாகவே, வடகொரிய அதிபரின் ரஷ்ய பயணத்திற்கு அமெரிக்க, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.