அமெரிக்க அதிகர் ஜோ பைடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான உறவு வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. துணை அதிபர் கமலா ஹாரிஸின் உதவியாளர்கள் அவர் ஓரம் கட்டப்படுவதாகக் கோபம் கொண்டுள்ளதாகவும், அதிபர் பைடனின் உதவியாளர்கள் அமெரிக்க மக்களின் உணர்வுகளை வைத்து விளையாடுவதாகவும் கருத்து தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதிபர் பைடனை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிக மக்கள் ஆதரவைப் பெற்று வருவதால், கமலா ஹாரிஸை உச்ச நீதிமன்ற உயர் பதவிக்கு நியமித்து, புதிதாக துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களில் தகவல்கள் பரவின. 


கமலா ஹாரிஸ், அவரது உதவியாளர்கள் ஆகியோர் எல்லைப் பிரச்னைகள் முதலான விவகாரங்களில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடுகள் வெல்லாதவாறு பைடன் செயல்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 



ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் 


 


அதே நேரத்தில், அதிபர் பைடனின் உதவியாளர்கள் தரப்பில் கமலா ஹாரிஸ் சமீப காலங்களில் அதிகமாக சர்ச்சையில் சிக்கிக் கொள்வதைச் சுட்டிக் காட்டி கோபம் கொண்டுள்ளனர். எல்லையோரப் பிரச்னைகளில் கமலா ஹாரிஸின் முயற்சிகள் தோல்வியடைந்ததே மக்களின் ஆதரவு குறைந்ததற்குக் காரணம் எனக் கருதுகின்றனர். சமீபத்தில் ஏபிசி நியூஸ், வாஷிங்க்டன் போஸ்ட் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், பைடன் மீது 53 சதவிகித மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், 41 சதவிகித மக்கள் பைடனின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். திருப்திகரமான மக்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தை விட தற்போது 11 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனையடுத்து, வெள்ளை மாளிகை தரப்பில் வெளிப்படையாகவே பைடனுக்கு, கமலா ஹாரிஸுக்கும் இடையிலான உறவு ஆக்கப்பூர்வமானதாகவும், சுமூகவாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 


எனினும், கமலா ஹாரிஸின் உதவியாளர்கள், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினத்தைச் பெண் என்ற புகழைப் பொறுக்க முடியாமல், அவர் தொடர்ந்து பைடனால் சிக்க வைக்கப்படுவதாக ரகசியமாகக் கூறுகின்றனர். அவருடைய திறமைக்குப் பொருந்தாத தவறான சூழல்களில் அரசு தோல்வியடையும் என்று நன்கு தெரிந்த திட்டங்களுக்கு கமலா ஹாரிஸை அனுப்புவதாகவும் அவரின் உதவியாளர்கள் கூறுகின்றனர். 



கமலா ஹாரிஸ் - ஜோ பைடன் 


 


இத்தகைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் கடந்த நவம்பர் 15 அன்று அமெரிக்கக் கட்டமைப்பு மசோதாவில் கைழுத்திடும் நிகழ்வில் ஒரே மேடையில் தோன்றினர். எனினும், மேடைக்கு அழைக்கப்பட்ட போது, அறிவிப்பாளர் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரைக் கூற மறந்ததால் அது சர்ச்சைக்குள்ளாகியது. கமலா ஹாரிஸ் இதனைப் பொருட்படுத்தாமல் மேடையில் அதிபர் பைடனுடன் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடந்துகொண்டுள்ளார். இந்த விவகாரத்தையும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் பேசுபொருளாக மாற்றி வருகின்றனர்.