பாகிஸ்தானின் காவல் அதிகாரி ஒருவர் சாலையில் தனது இரண்டு பிள்ளைகளை விற்க முயன்ற அவலம் அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தை சேர்ந்த காவலர் நிசார் லசாரி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர் கோட்கி மாவட்டத்தின் சிறைத்துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் தனது மகன்களை கோட்கி மாவட்டத்தின் சாலையில் விற்க முயற்சி செய்துள்ளார். ‘மகன்களை 50000 ரூபாய்க்கு விற்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்’ என அவர் கூவிக் கூவி விற்றது அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவர் ஏன் தனது பிள்ளைகளை விற்க முயன்றுள்ளார் என விசாரித்ததில் மேலதிக விவரங்கள் தெரிய வந்துள்ளன.
தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தனது உயர் அதிகாரியிடம் விடுமுறை கேட்டுள்ளார் நிசார். ஆனால் விடுமுறை அளிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் நிசாரை அங்கிருந்து 120 கிமீ தொலைவில் உள்ள லார்க்கானா என்னும் பகுதிக்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் பணியிடமாற்றத்தை தள்ளிவைக்கச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளார் நிசார்.
அதற்கு மறுத்த அதிகாரிகள் லஞ்சமாக 50000 ரூபாய் கேட்டுள்ளனர்.இதனால்தான் மன உடைந்துபோன நிசார் வேறு வழியில்லாமல் தன் பிள்ளைகளை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்க முயன்று லஞ்சம் கேட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கெஞ்சியுள்ளாஅர் நிசார். ‘விடுப்பு கேட்டதற்காக என்னை மட்டும் இப்படி தண்டிப்பது எப்படி நியாயம்?’ என அவர் கேட்ட வீடியோ வைரலானதை அடுத்த சிந்த் மாகாணத்தின் முதல்வர் இதில் தலையிட்டுள்ளார். பணியிடமாற்றம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு 14 நாட்கள் விடுப்பும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
கீழே: சிந்த் மாகாணத்தின் முதலமைச்சர் முராத் அலி.