மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் மர்மமான ராட்சச உலோக உருளை ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த "அபாயகரமான" பொருளில் இருந்து விலகி இருக்குமாறு கடற்கரைக்குச் செல்வோரை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.






இந்த பொருள் வணிக விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்றதாக இருக்காது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  மேலும் பலர் இதை UFO அல்லது காணாமல் போன மலேசிய MH370 விமானத்தின் துண்டு என்றும் கூறுகின்றனர். இதனை உறுதி செய்யும் வரை மக்கள் எந்த முடிவுக்கு வர வேண்டாம் என மேற்கு ஆஸ்திரேலியா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணையில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க அந்த பொருளை காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரை ஒதுங்கிய பொருளானது செம்பு நிறத்தில் சேதமடைந்த நிலையில் இருந்ததை பலரும் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”இந்த பொருள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது  வெளிநாட்டு விண்வெளி ஏவுகணை வாகனத்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்த ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது, மேலும் அண்டை நாடுகளை தொடர்பு கொண்டு இதை பற்றி கேட்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பொருளின் தன்மை குறித்து சரியாக தெரியவில்லை, இதனால் மக்கள் அதற்கு அருகில் செல்வது அல்லது அதனை வேறு இடத்திற்கு மாற்றும்  முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.  


இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் அல்லது சந்திரயான்-3 இன் மூன்றாம் நிலையிலிருந்து வந்த எரிபொருள் சிலிண்டர் என்று விண்வெளி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆலிஸ் கோர்மன் தனியார் பத்திரிக்கை நிறுவனத்திடம் கூறினார். மேலும், கரை ஒதுங்கி இருக்கும் பொருள் என்பது மிகவும் பெரியது. இவ்வளவு பெரிய பொருள் எப்படி கரை ஒதுங்கியது என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவத்தின் கூற்றுப்படி இது வெளிநாட்டு ராக்கெட்டின் 3 வது நிலையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பலரும் இதனை இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் அல்லது சந்திரயான் 3-ன், 3-வது நிலை என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.