Houthi Attack: இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. செங்கடலில் பரபரப்பு..

ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல், ஹமாஸ் காசாவில் இருக்கும் மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் சுரங்கம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறி தாக்குதல் நடத்தியது. 6 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரை நிறுத்த பல நாடுகள் அழுத்தம் கொடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Continues below advertisement

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து, உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளில் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக செங்கடலில் கடந்த சில மாதங்களாக வணிக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கடலில் உள்ள ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா கொடியுடன் வந்து கொண்டிருந்த கப்பல் பிரிட்டன் நாட்டிற்கு சொந்தமானது என ஹவுதி கிளர்ச்சியாளர் குழு செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். இந்த டேங்கர் கப்பல் ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ப்ரிமோர்ஸ்கில் இருந்து குஜராத் மாநிலம் வந்துக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இப்படி வழக்கமான பாதை விட சுற்றி வருவதால் செலவுகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என உலக அளவில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.  

Continues below advertisement