வாம்பயர் ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. CDC அறிக்கையின் படி, நியூ மெக்சிகோ ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின் மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாம்பயர் ஃபேஷியல் எனப்படும் பிரபலமான ஒப்பனை செயல்முறை மூலம் எதிர்பாராத விதமாக எச்ஐவி பரவுவதை சமீபத்திய வழக்கு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு தழும்புகள், கோடுகள், பெரிய துளைகள் அவற்றை சரி செய்து சருமத்தின் பளபளப்பையும், நேர்த்தியையும் மேம்படுத்துகிறது.
தனது அழகை பராமரிக்கவும் மேம்படுத்தவும் பெரும்பாலானோர் இந்த வாம்பயர் ஃபேஷியல் பக்கம் திரும்பியுள்ளனர். பெரும்பாலும் பெண்களே இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தான் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பயன்படுத்தியதன் மூலம் இந்த தவறு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு உரிமம் பெறாத ஸ்பாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்க சுகாதார நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் அழகு சேவைகள் இரண்டையும் வழங்கும் கட்டுப்பாடற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய கடுமையான அபாயங்களை இது எடுத்துக்காட்டுகிறது.
முறையான உரிமங்கள் இல்லாமல் இயங்கியதற்காகவும், பாதுகாப்பான தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காகவும் இந்த ஸ்பா 2018 -ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்ததற்காக அதன் உரிமையாளர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின், 2018 ஆம் ஆண்டில் ஒரு முன்னாள் வாடிக்கையாளர் எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், சில வாடிக்கையாளர்கள் ஸ்பாவிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மூலக் காரணிகள் எதுவும் தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.
CDC மற்றும் சுகாதாரத் துறை விசாரணையில் 59 ஸ்பா வாடிக்கையாளர்கள் ஸ்பாவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதில், 20 பேர் வாம்பயர் ஸ்பாவைப் பெற்றனர், மீதமுள்ளவர்கள் போடோக்ஸ் போன்ற சேவைகளுக்காக ஊசிகளைப் பெற்றுள்ளனர்.