தான் ட்விட்டரை அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதற்கு காரணம் என்ன என்பது குறித்து அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் மனம் திறந்துள்ளார்.


ட்விட்டர் :


எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை நேற்று முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்குபேரை பணி நீக்கம் செய்தார்.


44 பில்லியன் டாலர்கள் கொடுத்து ட்விட்டரை ஏன் வாங்கினார் என்பது குறித்து பல்வேறு வியூகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே எழுந்த நிலையில், ட்விட்டரை தான் ஏன் வாங்கினேன் என்பது குறித்து அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் ட்விட்டரை வாங்கியதன் நோக்கம் என்ன  என்பது குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் ட்விட்டரை வாங்கியது ஏன் என்பது பற்றியும் விளம்பரங்கள் பற்றியும் பல்வேறு வியூகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலானவைகள் தவறானவை.


நோக்கம் :


நான் ட்விட்டரை வாங்கியதன் நோக்கம், பரந்துபட்ட நம்பிக்கைக்கள் பற்றி வன்முறைக்கு இடமில்லாத வகையில், ஆரோக்கியமான முறையில் விவாதிக்க, எதிர்கால சந்ததியினருக்கு பொதுவான ஒரு டிஜிட்டல் நகரம் தேவைப்பட்டது தான் காரணம். தற்போதைய நிலையில் சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று பிரிந்து அதிக வெறுப்பை உருவாக்கும், நம் சமூகத்தை பிரிக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது.


பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் அந்த தீவிர கருத்துகள் மீது எண்ணெய் ஊற்றியதோடு, தீனியும் போட்டன. அதுதான் பணத்தைக் கொண்டுவருகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால் உரையாடலுக்கான வாய்ப்பு இழக்கப்படுகிறது. அதனால் தான் நான் ட்விட்டரை வாங்கினேன். அது எளிதாக இருந்தது என்பதால் அதை வாங்கவில்லை. நான் மேலும் பணம் சம்பாதிப்பதற்காக அதை வாங்கவில்லை. நான் விரும்பும் மனிதத்திற்கு உதவுவதற்காகவே அதை வாங்கினேன். 


விளம்பர தளம் :


மேலும், விளம்பரங்களை சரியாக செய்யும்போது அது உங்களை மகிழ்ச்சியாக்கும், பொழுதுபோக்க உதவும், தகவல்களை அளிக்கும். இப்படி ஒன்று இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாத ஒரு சேவையையோ அல்லது தயாரிப்பையோ அல்லது மருத்துவ சிகிச்சையையோ உங்களுக்கு காட்டும். அது உங்களுக்கு சரியானதும் கூட. அது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ட்விட்டர் பயனாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான அல்லது தொடர்புடைய விளம்பரங்களை விளம்பரப்படுத்த வேண்டும். பயனாளர்களுக்குத் தொடர்பில்லாத விளம்பரங்கள் ஸ்பாம்களாகவே இருக்கும். ஆனால் பயனாளர்களுக்கு அதிகம் தொடர்புடைய விளம்பரங்கள் உண்மையாகவே கருத்துள்ளவை.


அடிப்படையில், உலகில் அதிகம் மதிக்கப்படும் விளம்பர தளமாக ட்விட்டர் பார்க்கப்படுகிறது. அது ப்ராண்டையும், நிறுவனத்தையும் உறுதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. எங்களுடன் பார்ட்னராக இருக்கும் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து மிகச்சிறப்பான ஒன்றை கட்டியெழுப்புவோம் என்று எலான் மஸ்க் தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.