தாய்லந்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் திடீரென ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது


குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு:


தாய்லாந்து நாட்டின் வடக்கு மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் பல்வேறு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த காப்பகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.


துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்த்து அங்கிருந்த குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், அங்கிருந்து தப்பித்து சென்றார். 


34 பேர் உயிரிழந்ததாக தகவல்:


இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தனது மனைவி மற்றும் குழந்தை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர், முன்னாள் காவல்துறை அதிகாரி என தெரிய வந்துள்ளது. இக்குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் பான்யா கம்ராப் என சந்தேகிக்கப்படும் நபர் 2021 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல்துறை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.


இச்சம்பவமானது, நோங்புவா லம்பு நகரின் மையத்தில் நடந்ததாக  காவல்துறை அதிகாரி அச்சாயோன் கிரைதோங் கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டது. மேலும் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவரும் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர், கத்திகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் கட்டடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தாய் ஊடகம் தெரிவித்துள்ளது.




பிரதமர் இரங்கல்:


இத்துயர சம்பவத்திற்கு தாய்லாந்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.