இலங்கையில் கடந்த ஆண்டு முதல் நீண்ட நாட்களாக பொருளாதார நெருக்கடி நிலை இருந்தது. இதன்காரணமாக மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன் அங்கு ஆட்சி மாற்றம் வேண்டும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தச் சூழலில்  இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஒருவேளை இன்று அந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றால் நாளை நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. 


அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடி நிலைக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைத்த குழு மேலும் தரவுகள் திரட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த தீர்மானித்திற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் முதல் முறையாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது. அத்துடன் இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு இலங்கை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் இக்கட்டான பொருளாதார சூழலில் இலங்கை நாட்டின் மீது குற்றம் சுமத்துவது தேவையில்லாத ஒன்று என்று அவர் கூறி வருகிறார். 






இந்தியாவின் நிலைப்பாடு என்ன?


கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களக்கவில்லை. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேபோல் இம்முறை இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் 22 நாடுகள் ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர். அத்துடன் 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தனர். ஆனால் இம்முறை அமெரிக்கா இந்த தீர்மானத்தில் உள்ளதால் அதற்கு அதிகமான ஆதரவு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 47 நாடுகள் கொண்ட ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இம்முறை 35க்கும் மேற்ப்பட்ட நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று கருதப்படுகிறது. ஆகவே இம்முறை இலங்கைக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் நிச்சயம் வாக்களிக்கும் என்று கூறப்படுகிறது.