மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுவது வழக்கம். அந்தவகையில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க சென்ற போது ஒரு புது விதமான சிக்கலில் சிக்கியுள்ளார். இதிலிருந்து அவர் மீண்டு வர அறுவை சிகிச்சை வரை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்
தாய்லாந்து நாட்டின் பட்டாதாலுங்கு கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் கடந்த 22ஆம் தேதி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய மீன் ஒன்று தண்ணீரிலிருந்து துள்ளி இவருடைய தொண்டைக்குள் சென்றுள்ளது. அதன்பின்னர் மீன் அவருடைய தொண்டையில் சிக்கியுள்ளது.
மீனவர்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதாவது 5 இன்ச் அளவிலான மீன் ஒன்று இவருடைய தொண்டைக்குள் நன்றாக சிக்கி கொண்டு ஆக்ஸிஜன் வாயு போவதை தடுக்கும் வகையில் இருந்தது.
அதன்பின்னர் அவருக்கு மருத்துவர்கள் குழு சுமார் 30 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து சிக்கியிருந்த மீனை வெளியே எடுத்தனர். அந்த மீனவர் மீன் தன்னுடைய தொண்டைக்குள் சென்றவுடன் அவர் நீந்த முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த மீன் தொண்டை, வாய் மற்றும் மூக்கு ஆகிய மூன்றுக்கும் இடையேயான பகுதியில் சென்று சிக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவருடைய உடல் உறுப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அந்த மீனை அவர்கள் வெளியே எடுத்துள்ளனர். இந்த மாதிரி ஒருவர் மீன் ஒன்றால் அவதிப்படுவது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மீன் இப்படி சிக்கியதும் இதுவே முதல் முறை என்பதால் மருத்துவர்கள் மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் தற்போது குணம் அடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அவரை மற்ற மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்துமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்