தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே, கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று, இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் மோதிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட நிலையில் 9 பேர் பலியாகியுள்ளனர். இவ்விரு நாடுகளின் மோதல் பின்னணி என்ன.? பார்க்கலாம்.

Continues below advertisement

எல்லையில் ஏற்பட்ட மோதலில் 9 பேர் பலி

இன்று, தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில், இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதால், பதிலுக்கு, தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் குண்டுகளை போட்டது.

உபோன் ரட்சதானி மாகாணத்தில், 6 போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டு, கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

Continues below advertisement

இந்த மோதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சி சா கெத் மாகாணத்தில், எரிவாயு நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 எல்லைப்புற மாகாணங்களைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், கம்போடிய வீரர்களே முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. அதோடு, பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து - கம்போடியா மோதல் பின்னணி

தாய்லாந்து, கம்போடியா நாடுகளின் எல்லைகள், லாவோஸ் நாட்டு எல்லையுடன் பிணைந்துள்ளது. இந்த பகுதிக்கு எமரால்டு முக்கோணம் என்று பெயர் உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. இந்த எல்லை தொடர்பாக, பல தசாப்தங்களாக பிரச்னையும், மோதல்களும் இருந்து வருகின்றன.

15 வருடங்களுக்கு முன்பு, பயங்கரமான ராணுவ மோதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில், கம்போடிய ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்த சூழலை, தேசியவாதிகள் பெரிதுபடத்தினர். இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், தாய்லாந்து ராணுவ ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தனர். இதையடுத்து, கம்போடிய தூதரை வெளியேற்றிய தாய்லாந்து, அதன் சொந்த தூதரை அங்கிருந்து திரும்பப் பெற்றது.

மேலும், தாய்லாந்து நடத்திய விசாரணையில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கம்போடியா புதிய கண்ணிவெடிகளை புதைத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதை கம்போடியா மறுத்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், இருதரப்பும் பரஸ்பர மோதல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தாய்லாந்து அதன் எல்லையை யாரும் கடப்பதற்கு தடை விதித்த நிலையில், கம்போடியா சில இறக்குமதிகளை நிறுத்தியது.

இந்த எல்லைப் பிரச்னை, தாய்லாந்து உள்நாட்டு அரசியலிலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அங்கு பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவின் நடத்தை தொடர்பான நெறிமுறை விசாரணை நிலுவையில் உள்ளதால், அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தற்போது இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.