Thailand Accident: தாய்லாந்து நாட்டில் லாரி மீது ரயில் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோர  விபத்து:


தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த லாரியில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.  அந்த லாரி முவாங்கில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, அதற்கு வலதுப்பக்கத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது, லாரி மீது  அதிவேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரி தூக்கி வீசப்பட்டு, அதில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதனை அறிந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 






இதனை அடுத்து, இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


8 பேர் உயிரிழப்பு:


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "54 வயதான லாரி ஓட்டுநர் சோன்புரி மாகாணத்திற்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிரில் ரயில் வந்ததை பார்த்துள்ளார். ரயிலில் இருந்து 3 முறை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் அந்த லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, அதிவேகத்தில் வந்து ரயில் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் பிரிதாபமாக உயிரிழந்துள்னர். ” என்றனர்.


 உலகின் மிக ஆபத்தான சாலைகளில் ஒன்றாக இருக்கும் தாய்லாந்தில் கோர விபத்துக்கள் நடப்பது இதுமுதல் முறையல்ல. சமீபத்தில் ஜூலை 31ஆம் தேதி தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள கங்கை கோலோக் நகரில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிடத்தில் கட்டுமான பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.