Corona: சீனாவில் இருந்து வருபவர்கள் மீதான கொரோனா கட்டுப்பாடுகள் சரியான முடிவு தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது. 


இந்நிலையில் சமீபத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, சரியே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளிக்கையில், “ சீனாவில் கொரோனா பாதிப்பானது மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், அது குறித்து முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சீன அரசால் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில், உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதால், அது தன் நாட்டு மக்களை காக்கும் என நம்பி கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துகின்றன, இது சரியானது மட்டுமல்ல நியாயமானதும் தான்" என அவர் கூறியுள்ளார். 


சீனாவின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனா கடந்த வாரம் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தது.


கட்டுப்பாடுகளுக்கு தளர்வு:


கோவிட் தொற்றுநோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் வகையில் சீனாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை ரத்து செய்ய சீனா முடிவு செய்தது. இதற்கிடையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஃபைசரின் கோவிட் மருந்து பெய்ஜிங்கில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனா மெதுவாக கோவிட் உடன் வாழத் பழகி வருகிறது என்றே கூறவேண்டும். இதனால் கொரோனா தொடங்கியதிலிருந்து சீரான கோவிட் கட்டுப்பாடுகள் அமல் படுத்தி வந்த நிலையில் அதனை தற்போது சீன அரசாங்கம் தளர்த்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக,  வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த அவசியம் இல்லை என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.


புதைக்கக்கூடிய இடமில்லாத நிலை:


இந்த புதிய விதி ஜனவரி 8 முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி முன் வரை சீனாவில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் 5 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். சீனா தனது  கோவிட் கட்டுப்பாட்டு பாலிஸியை தளர்த்தியது உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது.  சீனாவில் கிராமப்புற நகரங்கள் தொற்றுநோய் பரவலை சமாளிக்க போராடும் போது கூட சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அதேபோல் சுடுகாடுகளில் இறந்தவர்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  தினசரி கோவிட் எண்ணிக்கையை சீனா தெரிவிப்பதை நிறுத்திவிட்டது. மேலும் கட்டாய கொரோனா பரிசோதனை தளர்த்திய நிலையில் உண்மையான தினசரி பாதிப்பு என்ன என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.  


பரிசோதனை கட்டாயம் இல்லை:


தரவுகளின்படி இனி சர்வதேச பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை இல்லை என்றும், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் சீனாவிற்கு வருவதை  எளிதாக்கும் வகையில் தடைகள் தளர்த்தப்பட்டதாக சீனாவின் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.


ஆனால் அதில் சுற்றுலாப் பயணிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்களுக்கான முக்கியமான வருவாய் ஆதாரமாக இருக்கும் சுற்றுலாவை மேம்படுத்த சீனக் குடிமக்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடும் பரிசோதனை, தனிமைபடுத்துதல் ஆகியவை சீன மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தது.


இதனால்  சர்வதேச பயணிகள் சீனாவிற்கு வர தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இருப்பினும், சீனாவிற்கு வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.