முன்னணி நிறுவனங்களில் நெருக்கடி:
ட்விட்டர் முதல் மெட்டா வரை பல பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான். தலைமை முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பாரபட்சமின்றி பணிநீக்கம் நடைபெற்றது. அதே போல அமேசான் நிறுவனத்திலும் மிகப்பெரிய பணிநீக்கம் ஒன்று நடக்க இருப்பதாக நவம்பர் மாதம் முதலே தகவல்கள் கசிந்து வந்தன. அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸும் மிகப்பெரிய பண வீக்கம் வர உள்ளது, அதனை எதிர்கொள்ள எல்லோரும் தயாராகுங்கள் என எச்சரித்து இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
அமேசானில் 18,000 பேர் பணி நீக்கம்:
அந்த எதிர்பார்ப்பையும் மீறி, அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 6% சதவிகிதம் பேர் ஒரே அடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஜனவரி 18 முதல் அமேசான் எடுத்துள்ள பணிநீக்க முடிவுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், சுமார் 3 லட்சம் ஊழியர்களை கொண்ட அமேசான் நிறுவனத்தால் 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடும் சரிவை சந்தித்த அமேசான் பங்குகள்:
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பங்குச்சந்தையில் அமேசான் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. செவ்வாயன்று 85.82 டாலராக இருந்த அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, புதன்கிழமை சந்தை நிறைவடையும்போது 85.14 டாலராக சரிவடைந்தது.
ரூ.5,540 கோடியை இழந்த ஜெஃப் பெசோஸ்:
இதன் காரணமாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் 675 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.5,540 கோடியை இழந்துள்ளார். சந்தையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சரிவு காரணமாகவும் அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டில் சந்தை மூலதனத்தில் சுமார் 834 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.68 லட்சம் கோடி இழப்பீட்டை சந்தித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரரகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெஃப் பெசோஸ் தற்போது, ரூ.8.76 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் நீடிக்கிறார்.