அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டனியோ (San Antonio, Texas) பகுதியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லை பிரச்சினை பல காலங்களாக தொடர்ந்து வருகிறது. தற்போது அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் கண்டெடுக்கப்பட்ட 46 பேரும் கண்டெய்னரில் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாகவும், உயிருக்குப் போராடிய 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெக்சாஸ் நகரின் காவல்துறை தெரிவித்துள்ளது.
சான் அன்டோனியாவில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நேற்று மாலை கன்டெய்னரில் அகதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சான் ஆண்டனியோ நகர தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்டெய்னரில் தண்ணீரே இல்லை; அதற்கு ஏ.சி. இருந்தும். அது செயல்படவில்லை. உள்ளே இருந்தவர்களின் உடலில் கடுமையான வெப்பத்தை உணர முடிந்தது. இதனால், வெப்பம் மற்றும் காற்று இல்லாதது ஆகியவைகளால் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்துவிட்டனர்.”என்று தெரிவித்தார்.
ரயில் தண்டவாளம் உள்ள பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் இருந்த ஒருவர், உதவிக்காக அழுக்குரல் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்வையிட்டுள்ளார். நிலைமை அறிந்த அவர் நகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சான் அன்டோனியோ பகுதியில் வெப்பநிலை அதிக ஈரப்பதத்துடன் 39.4 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அமெரிக்க அதிபரின் குடியுரிமை கொள்கைகள் மீதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.