Elon Musk: ”வோக் மைன்ட் வைரஸால்” தனது மகன் கொல்லப்பட்டதாக எலான் மஸ்க் பேசியுள்ளார்.


பாலின மாறுதல் பற்றி பேசிய எலான் மஸ்க்:


கனடாவச் சேர்ந்த உளவியலாளரும், எழுத்தாளருமான ஜோர்டான் பீட்டர்சனுடன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நேர்காணலில் ஈடுபட்டார். அப்போது,  பாலின மாறுதல் (Gender Dysphoria) தொடர்பான நடைமுறைகளுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தனது கவலைகள் குறித்து பேசினார். ஒரு நபரின் பாலின அடையாளம் மற்றும் பிறக்கும் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்திற்கு இடையே உள்ள முரண்பாடு காரணமாக ஏற்படும், பிரச்னைக்கான மருத்துவ பெயர் தான் ஜெண்டர் டிஸ்போரியா என குறிப்பிடப்படுகிறது.






மகனை பற்றி மனமுடைந்து பேசிய எலான் மஸ்க்:


நேர்காணலில் பேசிய எலான் மஸ்க், ”பாலினத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சை" என்ற வார்த்தை என்பது தவறான பரப்புரை.  இந்த நடைமுறைகளை டீன் ஏஜ் வயதினரிடையே கருத்தடை மற்றும் மாற்ற முடியாத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் நெறிமுறையற்ற நடைமுறைகளாக உள்ளன. பாலின மாறுதல் தொடர்பாக விழிப்புணர்வு பெற்றுவிட்டதாக கருதி எனது மூத்த மகனின் அறுவை சிகிச்சைக்கான, ஆவணங்களில் கையொப்பமிடுவதில் நான் பெரிதும் ஏமாற்றப்பட்டேன். ஏற்கனவே கோவிட் 19 போன்ற குழப்பங்களில் இருந்த சூழலில், சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பாலின மாறுதலால் எனது மகன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றெல்லாம் என்னிடம் கூறி கையொப்பம் பெற்றனர். மேலும், பருவமடைதல் தடுப்பான்கள் உண்மையில் கருத்தடை மருந்துகள் மட்டுமே என்பது எனக்கு விளக்கப்படவில்லை. அதன் காரணமாக நான் என் மகனை இழந்தேன். முற்போக்குதனமாக யோசிப்பதாக (Woke Mindset) கருதினேன். அந்த முற்போக்குதனமான சிந்தனை எனும் வைரஸே எனது மகனை கொன்றுவிட்டது. எனவே, பாலின மாறுபாடு தொடர்பான தவறான பரப்புரைகளை மேற்கொள்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ” என எலான் மஸ்க் மனமுடைந்து பேசினார்.


மஸ்கின் மகனுக்கு நடந்தது என்ன?


எலான் மஸ்கின் மூத்த மகனான சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஒரு பெண்ணாக மாற முடிவு செய்ததாக, தகவல் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மஸ்க் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில், சேவியர் விவியன் ஜென்னா வில்சனாக மாறியதோடு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் உடனான உறவைத் துண்டிக்க "மஸ்க்" என்ற குடும்பப்பெயரை கைவிட்டார். தொடர்ந்து, தனது பாலின மாறுபாட்டிற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.