ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எலான் மஸ்க் பேசியதாகத் தகவல்கள் பரவிய நிலையில், எலான் மஸ்க் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்திருக்கும் போரை அமைதிக்குக் கொண்டு வருவது தொடர்பாக முன்னதாக எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு மிகப் பெரும் அளவில் கண்டனங்கள் கிளம்பியது.


இந்நிலையில், எலான் மஸ்க் இந்தக் கருத்தை முன்வைப்பதற்கு முன்னர், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் பேசியதாக முன்னதாகத் தகவல்கள் பரவின.


க்ரிமியா பகுதி குறித்து மஸ்க் சொன்ன கருத்துக்கு உக்ரைன் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மஸ்கின் இந்தக் கருத்தை புதின் வரவேற்றுள்ளார் எனவும் தகவல்கள் பரவின.


இந்நிலையில் எலான் மஸ்க் இந்த செய்திகளை முன்னதாக அடியோடு மறுத்துள்ளார்.


உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த தன் கருத்து பற்றி ரஷ்ய அதிபரிடம் தான் எதுவும் பேசவில்லை என்றும், தான் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


மேலும் தான் 18 மாதங்களுக்கு முன் புதினுடன் பேசியதாகவும், விண்வெளி குறித்தே தங்கள் பேச்சு அமைந்திருந்ததாகவும் எலான் மஸ்க் தன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


 






ரஷ்யா - உக்ரைன் இடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் ரஷ்ய, உக்ரைன் மக்கள் தாண்டி உலகின் பல நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக நான்கு சுற்றுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்படாததால் சிறு இடைவெளிக்குப் பிறகு இரண்டு நாடுகளும் போரைத் தொடர்ந்து வருகின்றன.


இச்சூழலிம் முன்னதாக உக்ரைன் - ரஷ்யா போருக்கான தீர்வு எனக் கூறி சில கருத்துகளை எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.


”ஐநா மேற்பார்வையில் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் தேர்தல் நடத்த வேண்டும், மக்கள் எதிர்த்தால் ரஷ்யா வெளியேற வேண்டும், கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதி எனவே கிரிமியாவிற்கு நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், உக்ரைன் நடுநிலையாக விளங்க வேண்டும்” ஆகிய தீர்வுகளை முன்வைத்து ட்வீட் செய்திருந்தார்.


 






இந்த இந்தப் பதிவுக்கு  உக்ரைன் மக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக மக்களுக்கு உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்கை பிடிக்குமா அல்லது ரஷ்ய ஆதரவு எலான் மஸ்க்கை பிடிக்குமா என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பி இருந்தார்.


எலான் மஸ்கின் இந்த ட்வீட்டுக்கு ஜெர்மனிக்கான உக்ரைன் தூதரும் ட்விட்டரில் கடும் எதிர்வினையாற்றி இருந்தார்.


இந்நிலையில், முன்னதாக தன் மற்றொரு பதிவில், பெரிய அளவில் போர் தொடர்ந்தால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக் குறைவு. உக்ரைனின் மக்கள்தொகையைப் போல் ரஷ்யா மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, உக்ரைன் மக்கள்மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அமைதியைத் தேடுங்கள். அமைதிதான் சிறந்த வழி'' எனக் குறிப்பிட்டிருந்தார்.